பிஆர்பி நிறுவன சொத்துகள் கணக்கெடுப்பு.. 13 பேர் கொண்ட குழு அமைப்பு

மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள பிஆர்பி நிறுவன சொத்துகளை கணக்கிட 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் நடந்த கிரானைட் முறைகேட்டில் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் இரவு பகல் பாராது சம்மந்தப்பட்ட நபர்களிடம் முறையான விசாரணை நடத்தி தனது அறிக்கையை, 2015, நவ.23ல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிஆர்பி நிறுவனத்தின் கிரானைட் விற்பனை மற்றும் ஏற்றுமதி முறைகேடு குறித்த விசாரணையை மத்திய அமலாக்கத்துறையினர் துவக்கினர். விசாரணையில் பிஆர்பி நிறுவனம் முறைகேடாக ரூ.528 கோடி மதிப்புள்ள 1,625 அசையா சொத்துக்களை வாங்கியிருப்பதாகவும், வங்கியில் ரூ.32,57,275 நிரந்தர வைப்பு நிதியாக வைத்திருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

இந்த சொத்துக்கள் முறைகேடான பண பரிவர்த்தனையின் மூலம் வாங்கப்பட்டதாக, அமலாக்கத்துறை புகார் கூறியிருந்தது. இதனால் சொத்துக்கள் மற்றும் வங்கி வைப்பு நிதியை முடக்குவதாக தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள, பிஆர்பி நிறுவனத்தின் 1,625 வகையான சொத்துக்களை கையகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர் உத்தரவின்பேரில் 13 பேர் கொண்ட குழு பிஆர்பி நிறுவன சொத்துகளை மதிப்பிட அமைக்கப்பட்டுள்ளது. பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனங்களின் சொத்துகளை கணக்கிடும் பணி மதுரை மாவட்டத்தில் இன்று தொடங்குகிறது.
author avatar
Castro Murugan

Leave a Comment