மேலும் 10 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் – உயர்கல்வித்துறை அறிவிப்பு

மாநில அளவில் சென்னை அறிவியல் விழா நடத்தப்படும் என பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வரும் கல்வியாண்டில் மேலும் 10 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.  மாநில அளவில் சென்னை அறிவியல் விழா நடத்தப்படும்.

இதன் அங்கமாக அறிவியல் கண்காட்சி, குழு விவாதங்கள், பிரபல அறிவுரைகள், அறிவியல் செயல்முறை சோதனைகள் மற்றும் அறிவியலில் பொழுதுபோக்கு அம்சமாக பொம்மலாட்டம் ஆகியவைகளும் நடத்தப்பட உள்ளன. மாணவர்களுக்கு இடையே ஆய்வு மனப்பான்மையை உருவாக்கி ஊக்குவிக்கும் விதமாக தமிழக அளவில் கணிதவியல், வேதியியல் & உயிரியல் துறைகளில் கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். 75% ஊரகம், 25% நகர்புறங்களிலிருந்தும் மாணவர்கள் தேர்வுச் செய்யப்பட்டு 21 நாட்கள் முகாம்கள் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

மேலும், உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு பெற திருநெல்வேலி மாவட்ட பனைப்பொருள் கூட்டுறவு சம்மேளன நிறுவனம் மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் பதிவு செய்வதற்காக அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்