ரூ.6 ஆயிரம் கோடிக்கு 6 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்..!

ராணுவ தாக்குதலில் பல்வேறு சாகசங்களை புரியும் ‘அப்பச்சி’ ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்ய இந்தியா விரும்பியது. இந்தியாவின் விருப்பத்துக்கு இணங்கியுள்ள அமெரிக்க அரசு, 6 அப்பச்சி ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ கூறியுள்ளது.

இது குறித்து ‘பென்டகன்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அமெரிக்க நிர்வாகம் ‘வெளிநாட்டு ராணுவத்துக்கு விற்பனை’ என்ற அடிப்படையில் 930 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.6 ஆயிரம் கோடி) 6 ஏ.எச்-64இ அப்பச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.

அத்துடன், ஹெல்பயர், ஸ்டிங்கர் ஏவுகணைகள், 14 டி700-ஜி.இ-701டி ரக என்ஜின்கள், 4 ஏ.என் மற்றும் ஏ.பி.ஜி.78 தீத்தடுப்பு ரேடார்கள், 4 ரேடார் எலக்ட்ரானிக் அலகுகள், இரவுநேர பயன்பாட்டுக்கு உதவும் சென்சார்கள் உள்ளிட்ட ஏராளமான தளவாடங்களையும் இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்து இருப்பதாக பென்டகன் மேலும் கூறியுள்ளது.

இதுபற்றி அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ‘பென்டகன்’ தனது அறிவிக்கையை அனுப்பி வைத்துள்ளது. எந்த எம்.பி.யும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், இந்த விற்பனை விவகாரத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்.

‘பென்டகன்’ தனது அறிவிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

‘அப்பச்சி’ ரக ஹெலிகாப்டர்கள், அமெரிக்க ராணுவத்தாலும், சர்வதேச படைகளாலும் பயன்படுத்தப்படுபவை. இவற்றை பயன்படுத்துவதிலோ, தனது ராணுவத்தில் சேர்ப்பதிலோ இந்தியாவுக்கு எந்த கஷ்டமும் இருக்கப்போவதில்லை.

தனது நாட்டை பாதுகாத்துக்கொள்ளவும், பிராந்திய அச்சுறுத்தலை சமாளிக்கவும் இந்தியாவுக்கு இது வலிமையை அளிக்கும். தனது படைகளை நவீனமயமாக்குவதற்கும் உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அடுத்த மாதம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மற்றும் ராணுவ மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதற்கு முன்பாக இந்த ஹெலிகாப்டர்கள் விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment