மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரி காரில் கடத்தமுயன்ற 250 கிலோ கஞ்சா பறிமுதல்..!

திண்டுக்கல் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரி அருண் காரில் இருந்து 250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தலக்குண்டுவைச் சேர்ந்த அருண் என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ளார்.

இவர் கடந்த ஒரு வாரமாக விடுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அருணின் காரில் போதைப் பொருள் இருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து தமிழ்நாடு கேரளா மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் புரூனே தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர்.

வத்தலக்குண்டு அருகே காரை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது 250 கிலோ கஞ்சாவை அருண் தனது காருக்குள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அருணை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அருண் கைது செய்யப்பட்டார். மேலும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி அருண் உடனிருந்த ரவி மற்றும் ஸ்ரீராம் ஆகியோரையும் கைது செய்த அதிகாரிகள், கஞ்சா எவ்வாறு கிடைத்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வத்தலக்குண்டுவில் உள்ள அருணின் வீட்டிற்கு போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சென்றனர். வீட்டில் உள்ளவர்களிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment