மத்திய அமைச்சரவை சென்னை உள்ளிட்ட மூன்று விமான நிலைய புதிய முனையத்திற்கு ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை ,சென்னை, லக்னோ, கவுகாத்தி விமான நிலையங்களில் புதிய முனையங்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. 5000 கோடி ரூபாய் செலவில் இந்த முனையங்கள் அமைக்கப்படுமென மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் சென்னையில் 2467 கோடி ரூபாய் செலவில் சேட்டிலைட் முனையம் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு மூன்றரை கோடி பயணிகள் வந்து செல்ல வசதி ஏற்படுத்தப்படும் என்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

சென்னையில் ஏற்கனவே மற்றொரு விமான நிலையம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலை அடுத்தும், பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே மற்றொரு முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய முனையம் தற்போது உள்ள முதல் மற்றும் இரண்டாவது விமான ஓடு தளங்களுக்கு இடையில் அமைக்கப்பட உள்ளது. முதல் ஓடு தளத்தில் வடபுறத்தில் அமைக்கப்படும் முனையத்தில் நவீன வசதிகள் அனைத்தும் செய்ய திடமிடப்பட்டுள்ளது.  தற்போதுள்ள முனையங்களில் இருந்து புதிய முனையத்திற்கு செல்ல முதலாவது ஓடு தளத்திற்கு அடியில் 500 கோடி ரூபாய் செலவில் இரண்டு சுரங்க பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் ஒன்று பயணிகள் செல்லவும், மற்றொன்று சரக்குகள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படும்.

சுரங்க பாதைகள் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிலையத்துடன் விமான போக்குவரத்து துறை  அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. பயணிகளை சுரங்க பாதையில் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சுரங்கங்கள் தரைக்கு அடியில் பத்தரை அடி ஆழத்தில் , ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளன.

சாட்டிலைட் முனையத்தில் விமானங்கள் நிறுத்த இடம் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 40  விமானங்களை கையாளும் திறன் சென்னை விமான நிலையத்திற்கு வாய்க்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதே நேரத்தில் வாகனங்கள் நிறுத்த பல அடுக்கு மாடி நிறுத்தம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த விமான முனையமும் அமைக்கப்படும். இதே போன்று ஒருங்கிணைந்த சரக்கு கட்டிடமும் கட்டப்பட உள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்ள பழைய முனைய கட்டிடங்களை இடித்து விட்டு, அதன் பின்னர் மூன்றாவது முனைய பணிகள் தொடங்கப் பட உள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment