மக்கள் வருகை குறைந்ததால் பிரிட்டனில் மாதந்தோறும் 60 வங்கிகள் மூடப்படுகின்றன..!

ஒரு காலத்தில் பணம் செலுத்துவதாக இருந்தாலும் சரி, பணம் எடுப்பதாக இருந்தாலும் சரி, நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.

இதேபோல் செக் பரிமாற்றம், டிமாண்டு டிராப் பரிமாற்றம் போன்றவற்றுக்கும் கண்டிப்பாக வங்கிக்கு செல்ல வேண்டும்.

ஆனால், இப்போது எல்லாவற்றையுமே ஆன்லைன் மூலம் செய்து விடலாம் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. கையில் இருக்கும் ஸ்மார்ட் போனை வைத்து கொண்டே பணபரிமாற்றம் உள்ளிட்ட அத்தனை பணிகளையும் செய்து விடலாம்.

இதன் காரணமாக மக்கள் வங்கிகளுக்கு செல்வது மிகவும் குறைந்து வருகிறது. இங்கிலாந்தில் மக்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே அனைத்து பரிமாற்றங்களையும் செய்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் வங்கிக்கு செல்வது வெகுவாக குறைந்து இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராததால் வங்கிகளை திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரிட்டனில் பல வங்கி கிளைகள் மூடப்பட்டு வருகின்றன. 2015-ல் இருந்து 2018 வரை 3 ஆண்டுகளில் மட்டும் 2900 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன.

இப்போது மாதந்தோறும் 60 கிளைகள் வரை மூடப்பட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால் கிளைகளை மூடுவதின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

2014-க்கு பிறகு பொதுமக்கள் வங்கிக்கு வருவது 40 சதவீதம் குறைந்து இருக்கிறது. அதே நேரத்தில் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வங்கி பரிவர்த்தனைகள் செய்வது 73 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

இதனால் தான் தொடர்ந்து வங்கிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் முன்னணி வங்கியான நாட்வெஸ்ட் மட்டுமே 635 கிளைகளை மூடி இருக்கிறது.

எச்.எஸ்.பி.சி. வங்கி 440 கிளைகளையும், லாய்ட்ஸ் வங்கி 366 கிளைகளையும் மூடி இருக்கின்றன. நாட்டிலேயே ஸ்காட்லாந்து பகுதியில்தான் அதிக அளவில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கின்றன.

ஆன்லைன் வங்கி நடைமுறை வந்ததற்கு பிறகு பல நாடுகளிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment