நெல்லையில் மகனை விலங்கிட்டு வீட்டுச் சிறையில் வைத்த தந்தை!போலீஸ் விசாரணை

காதலித்த சிறுமியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு தப்ப முயன்ற இளைஞன் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே  ஒவ்வொரு முறையும் உறவினர்களிடம் கையும், களவுமாக பிடிபடும் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதால், கை மற்றும் கால்களுக்கு விலங்கிட்டு அவரது உறவினர்கள் வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர்.

கடைய நல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை தெருவை சார்ந்த சுப்பையா மகன் கருப்பசாமி. 21 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய உறவுக்கார பெண்ணை நீண்ட காலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் 18 வயது பூர்த்தி அடையாதவர் என்பதால் இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து கடந்த வாரம் இருவரும் வீட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது சிறுமியின் உறவினர்கள் பிடித்து கண்டித்துள்ளனர். இந்த நிலையில் செவ்வாயன்றும் சிறுமியை அழைத்துக் கொண்டு கருப்புசாமி ஊரை விட்டுச் செல்ல முயன்றார். அப்போது அவரைப் பிடித்த உறவினர்கள், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, கருப்பசாமியை போலீசார் கண்டித்து அனுப்பி வைத்தனர்.

சிறுமியை அழைத்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை தீவிரம் அடையும் என்பதை உணர்ந்த அவரது பெற்றோர், கருப்பசாமியை எச்சரித்தனர். எச்சரிக்கையையும் மீறி அவர் மீண்டும் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். இதை அடுத்து கருப்பசாமியை வீட்டுக்கு அழைத்து வந்த பெற்றோர் புத்திமதி கூறினர். ஆனால் அதைக் கேட்காத கருப்பசாமி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

மகனைக் காப்பாற்ற வேறு வழியில்லை என்று கருதிய உறவினர்கள் கை, மற்றும் கால்களுக்கு இரும்பு விலங்கிட்டு வீட்டுச் சிறையில் வைத்தனர். இது குறித்து கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் பரிமளா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment