தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த்தி தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மனிதச்சங்கிலி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டன.

புதுக்கோட்டையில் வாகனத்தில் நின்றபடி மக்களை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பின்னர் மனிதச்சங்கிலியில் கலந்து கொண்டார். புதிய பேருந்து நிலையம் தொடங்கி, பல்வேறு வீதிகளைக் கடந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொண்டர்கள் கைகோர்த்து நின்றனர்.

சென்னையில் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் முன்பு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மனிதச்சங்கிலி நடைபெற்றது.

சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை திமுக சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தஞ்சை பள்ளி அக்ரஹாரம் முதல் கொம்பன் குடிசை வரை 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு, கட்சி தொண்டர்கள், விவசாயிகள் மனிதச்சங்கிலி அமைத்திருந்தனர். அண்ணா சிலை முன்பு நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் மனிதச்சங்கிலி நடைபெற்றது.

கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற மனிதச்சங்கிலியில் ஏர் கலப்பைகளை தோளில் சுமந்தபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திருச்சி ரயில்வே ஜங்சன் அருகே தொடங்கிய மனிதச்சங்கிலியானது மேலப்புதூர், காந்தி மார்க்கெட் வரை தொடர்ந்தது. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு இருசக்கர வாகனத்தில் சென்றபடி  பார்வையிட்டார்.

இதேபோல் தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தலைமையில் அனைத்துகட்சியினர் உட்பட 1000 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்ட மனித சங்கிலி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர் . காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment