செம்ம ஷாக்…நவம்பர் 30-க்கு பிறகு ரேசனில் இலவச அரிசி,கோதுமை திட்டம் கிடையாது – மத்திய அரசு அறிவிப்பு!

பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் ரேசனில் இலவசமாக வழங்கப்படும் கூடுதல் உணவு தானியம் வழங்கும் திட்டம் வரும் நவ.30 ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கும் பரிசீலனை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ‘பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா’ எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.அதன்படி,இத்திட்டத்தின் வாயிலாக ரேசன் கடைகள் மூலமாக 80 கோடி பேருக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக,இத்திட்டத்தின் மூலம் மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

மூன்று மாதங்களுக்கு (ஏப்ரல்-ஜூன் 2020) என்ற கணக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டம் கொரோனா நெருக்கடி தொடர்ந்ததால், மேலும் ஐந்து மாதங்களுக்கு ஜூலை-நவம்பர் 2020 வரை நீட்டிக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை தொடங்கிய பிறகு,இத்திட்டம் மீண்டும் இரண்டு மாதங்களுக்கு (மே-ஜூன் 2021) நீட்டிக்கப்பட்டு,பின்னர் மேலும் ஐந்து மாதங்களுக்கு (ஜூலை-நவம்பர் 2021) நீட்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் வருகின்ற நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில்,பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஏய்) திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நீட்டிப்பது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மத்திய உணவுத்துறைச் செயலாளர் சுதன்ஷூ பாண்டே கூறுகையில்,”தற்போது பொருளாதாரம் புத்துயிர் பெற்று மீண்டு வருவதாலும், உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக இருப்பதாலும் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஏய்) மூலம் இலவச உணவு தானிய விநியோகத்தை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை”, என்று தெரிவித்துள்ளார்.