‘காலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம், நடவடிக்கை எடுக்க உத்தரவு..!

ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூல் செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்த நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த நடித்த ‘காலா’ திரைப்படம் பலத்த சர்ச்சைக்கிடையே வெளியானது. இந்தப்படம் வெளியிடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இவர் ஏற்கனவே கபாலி படத்தில் அதிக கட்டணம் வசூலித்ததை நீதிமன்றத்தில் வழக்காக தொடுத்து அதன் வரவு செலவுகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது முன் கதை.

இதே போல் தியேட்டர்களில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதையும், வாகன நிறுத்தக்கட்டணம் என்ற பெயரில் அதிக அளவு தொகை வசூல் செய்வதையும் எதிர்த்து வழக்கு போட்டவர். ‘காலா’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்து ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படம் வெளியான பின்னர் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளில் புகார் அளித்து பின்னர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவில் கூறியிருப்பதாவது:

“நடிகர் ரஜினி நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்கவேண்டுமென உள்துறைச் செயலாளர் , வருமானவரித்துறை தலைமை ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு மனு அளித்துள்ளேன்.”

என்று தெரிவித்துள்ள அவர், இந்தத் திரைப்படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 10 மடங்கு வரை கூடுதலாக விற்பனை செய்ய வாய்ப்புள்ளதால், கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், அரசு நிர்ணயம் செய்து பிறப்பித்த அரசாணையில் உள்ள விலையைவிட கூடுதலாக வசூலித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.

விதிமீறலில் ஈடுபடும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், படத்திற்கு வருபவர்களுக்கு வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தி தர வேண்டிய திரையரங்கங்கள், அதற்காக வசூலிக்கும் கட்டணமும் கூடுதலாக உள்ளதாக தெரிகிறது. சில நேரங்களில் சினிமா கட்டணத்தைவிட பார்க்கிங் கட்டணம் அதிகமாகி இருக்கிறது என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

வாகன நிறுத்தத்திற்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என திரையரங்குகளுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலித்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment