ஐஆர்சிடிசி அதிரடி அறிவிப்பு..!

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு டெபிட் கார்டு பயன்படுத்துவோரிடம் இனி பரிவர்த்தனை கட்டணம்  வசூலிக்கப்பட மாட்டாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயிலில் டிக்கெட் எடுக்க இணையதளத்தில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகம். தினமும் லட்சக்கணக்கானோர் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்கின்றனர். முன்பதிவுக்கான கட்டணத்தை டெபிட், கிரிடிட் கார்டு மூலம் செலுத்தும்போது, பரிவர்த்தனை கட்டணமாக குறிப்பிட்ட தொகை வங்கிகள் மூலம் பிடித்தம் செய்யப்படுகின்றன. கிரிடிட் கார்டுகளுக்கு பரிவர்த்தனை கட்டணமாக 1.8 சதவீதமும், டெபிட் கார்டுகளுக்கு அந்தந்த வங்கிகள் நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வரும் நிலையில், ரயில் முன்பதிவுக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதை கருத்தில் கொண்டு முன்பதிவு செய்வோரிடம் பரிவர்த்தனை கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது என வங்கிகளுக்கு ஐஆர்சிடிசி கடிதம் எழுதியது. இந்நிலையில், டெபிட், இ-வாலட் மூலம் முன்பதிவு செய்வோரிடம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிப்பதை வங்கிகள் நிறுத்தியுள்ளன. இது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment