கேரளா அரசு அதிரடி முடிவு..!

கேரளாவில் மாவோயிஸ்டுகள் சரணடையும் பட்சத்தில், அவர்களுக்கு வீடு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் ரொக்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.  இந்நிலையில், கேரளாவிலுள்ள வயநாடு, இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அரசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்துவது குறித்தும், அவர்களை சரணடைய வைப்பது குறித்தும் கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு சில சலுகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக,  கேரள முதல்வர் அலுவலகம் சார்பில் இன்று வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கேரளாவில் மாவோயிஸ்டுகள் சரணடையும் பட்சத்தில், அவர்களுக்கு வீடு, ரொக்கப் பணம், திருமண நிதியுதவி ஆகியவற்றை வழங்குவது என முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மாவோயிஸ்டுகள் ஏ, பி, சி என 3 நிலைகளாக தரம் பிரிக்கப்படுவார்கள்.  ஏ பிரிவு மாவோயிஸ்டுகள் சரணடையும்பட்சத்தில், அவர்களுக்கு வீடும், தவணை முறையில் ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.

பி மற்றும் சி பிரிவு மாவோயிஸ்டுகள் சரணடையும்பட்சத்தில், அவர்களுக்கு வீடும், தவணை முறையில் ரூ. 3 லட்சமும் வழங்கப்படும். மேலும், திருமணம் செய்ய விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு ரூ. 25,000 நிதியுதவியும், படிக்க விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு ரூ. 15,000 நிதியுதவியும் வழங்கப்படும்.

தொழில் பயிற்சி பெற விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு மாதம் ரூ. 10,000 வீதம் 3 மாதங்களுக்கு வழங்கப்படும். இதேபோல், ஏகே 47 ரக துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பவர்களுக்கு ரூ. 25,000 வழங்கப்படும். பிற ஆயுதங்களை ஒப்படைப்பவர்களுக்கு அதற்கேற்ற வகையில் பணம் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment