நீதிபதி தஹில் ரமணி மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மேகாலயா நீதிமன்றத்திற்கு தஹில் ரமணி மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி நீதிபதி பணிநியமன குழுவான கொலிஜியம் பரிந்துரை செய்து இருந்தது.ஆனால் இதனை ஏற்க மறுத்த ரமணி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

எனவே நீதிபதி ரமணி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக வரவேண்டும் என்று வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.இதன் பின்னர் மேகாலயா நீதிமன்றத்திற்கு தஹில் ரமணி மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கற்பகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள்,எந்த ஒரு நீதிபதியாக இருந்தாலும்  தான் பாதிக்கப்பட்டதாக கருதினால் அவர்கள் மட்டுமே வழக்கு தொடர வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது  .மூன்றாவது நபர் வழக்கு தொடர வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தனர்.மேலும் இது தொடர்பான வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தெரிவித்துவிட்டனர்.