ஒரு வரலாற்று பயணத்தின் நாட்குறிப்பு…

‘சங்கர், கோகுல், இளவரசன் என எத்தனைஎத்தனை கொலைகளடா அத்தனை கொலையும் சாதியால் என்றால்சாதியை வெட்டி புதைத்திடடா’‘வீதியிலே சாலையிலே பயணம் வருகின்றோம் சாதி எனும் இழிவகற்ற தோழர்கள் வருகின்றோம்’வெண்புறாவின் வார்த்தைகள் கரிசல் கருணாநிதியின் குரலில் உயிர்பெற்று அழைக்கிறது. செம்படையின் கம்பீரத்தோடு கால்கள் விறைத்து பாதங்கள் முன்னேறுகின்றன. தார்ச்சாலைகளும், புழுதி படிந்த மண் சாலைகளும்பின்னோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதோ சேலம் மாவட்ட எல்லையை கடப்பதற்கு சில கிலோ மீட்டர்களே எஞ்சியிருக்கின்றன.பாதுகாப்பிற்காக எங்களோடு வந்து கொண்டிருந்த காவல் ஆய்வாளருக்கு அலைபேசியில் அழைப்பு வர எடுத்துப் பேசினார்.நடைபயண பாதுகாப்பிற்கு சென்று கொண்டிருப்பதாக சொன்னார். மறுமுனையில் என்னகேள்வி வந்ததோ… ஆய்வாளரின் பதில் நம்மைசிலிர்க்க வைத்தது. ‘ஆங்… அவங்க இந்தியா பூராம் ஒரே சாதியா இருக்கனுமுன்னு நடந்துபோறாங்க’ நானும் சந்தோசமாக போறேன்னு பதில் சொன்னவர், இப்படியே இடது பக்கமாககவனமா போங்க தம்பிகளா? என சேலம் மாவட்ட எல்லையில் விடை கொடுத்தார்.
மிகுந்த கவனமாக இருந்தாலும் விபத்துகளைதவிர்க்க முடியவில்லை. உத்திரமேரூர் பிரியா,விருதுநகர் ஸ்ரீதரன் ஆகியோரின் தோள்பட்டை மீது வாகனம் மோதி பாதிப்புகளை ஏற்படுத்தியது. தேசிய நெடுஞ்சாலையில் மாலை நேர பயணங்கள் அச்சமூட்டுவதாகவே இருந்தன. தோழர்கள் கதிர்வேல், அம்ஜத்கான், மனோஜ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒளிரும் மேல்சட்டை அணிந்து பாதுகாப்பு வளையத்திற்குள் நடைபயணத்தை வழி நடத்தினார்கள். கனிந்த அன்பின் தோழமை வளையத்திற்குள் பாதுகாப்பை உணர்ந்தோம்.2015 ஜூன் மாதத்தில் ஓமலூர் கோகுல்ராஜ் கொல்லப்படுகிறார். ‘தீரன் சின்னமலை பேரவையினர் தங்களது அடையாளத்துடனே கோகுல்ராஜை கடத்துகின்றனர். சாதிச் சங்கம் நேரடியாகவே களத்தில் இறங்கிவிட்டது.
தமிழக அரசோ தமிழகத்தில் ஆணவப்படுகொலை ஒன்று கூட நடைபெறவில்லை என கூச்சமின்றி பொய்யுரைக்கிறது. கோகுல்ராஜ் படுகொலை ஏற்படுத்திய பாதிப்பு தான்சேலத்தில் இருந்து நடைபயணம் என்ற எண்ணம் கருக் கொண்டதற்கு காரணம். 2015ல் திட்டமிடப்பட்ட பயணம் தமிழக அரசியல் சூழல்களால் 2017 ஜூன் 9ல் துவங்கினாலும் மனதளவில் சேலம் முதல் சென்னை வரை நடந்து கொண்டேதானிருந்தோம். ஜூன் 9 சேலத்தில் துவக்க நிகழ்ச்சி சேலம்மாவட்டச் செயலாளர் ஆர்.குழந்தைவேலு தலைமை வகித்தார். சாதி ஆணவப் படுகொலைகளால் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்தவர்கள் மேடையில் இருந்தார்கள். கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரன் கலைச்செல்வன், விமலாதேவியின் கணவர் திலீப்குமார், மாரிமுத்துவின் துணைவியார் அபிராமி, கலைச்செல்வியின் சகோதரி பாப்பம்மாள், நந்தினியின் தாயார் ராஜகிளி, ஐஸ்வர்யாவின் தந்தையார் தங்கவேலு ஆகியோரை ஒரு சேர பார்க்க மனது துணியவில்லை. பெருக்கெடுக்கும் கண்ணீரோடு பயணத்தை துவக்கினோம். மாநிலத்தலைவர் பி.சம்பத் துவக்கி வைத்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது இயக்க தோழர்களுடன் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். கைகளைப் பற்றிக் கொண்டு வழியெங்கும் விடுதலை சிறுத்தைகள் வரவேற்பார்கள், வாய்ப்புள்ள தூரம் உடன் நடந்துவருவார்கள் என்றார்.ஆம். ஒவ்வொரு இடத்திலும் பல மணி நேரம் காத்திருந்து விடுதலை சிறுத்தைகள் எங்களை வரவேற்றார்கள். கொடிகளோடு பலகிலோமீட்டர்கள் நடந்து வந்தார்கள். திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகிகளும், தாம்பரத்தில் வன்னியரசும் உணவுபொறுப்பை ஏற்றுக் கொண்டனர். கள்ளக்குறிச்சியில் வி.சி.க. பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் நகர எல்லையில் வரவேற்று உடன் நடந்து வந்தார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடைபயணம் தான் இது. ஆனால் தோழமை இயக்கங்களோ கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஆதி தமிழர் கட்சியின் கு.ஜக்கையன், திராவிடர் விடுதலை கழகத்தின் கொளத்தூர் மணி, கத்தோலிக்க திருச்சபையின் அருட்பணியாளர்கள் அந்தோணி சகாயம், சேவியர்,ஜான் சுரேஷ், ஏசு மரியான், ஜேக்கப், மக்கள்புரட்சி கழகத்தின் வர்கீஷ், சாதி மறுப்பு திருமணசங்கத்தினர், சரி நிகர் முற்போக்கு திருமணஇயக்கத்தினர், தலித் மண்ணுரிமை கூட்டமைப்பின் செளரி, தம்மம் சிந்தனையாளர் பேரவையின் பேரா.பரந்தாமன், எஸ்.சி/எஸ்.டிசங்கத்தினர், வழக்கறிஞர்கள் என வழி நெடுகிலும் வரவேற்று வாழ்த்தினார்கள்.
சிவப்பும், நீலமும் இணைந்திருக்கிற சீருடையுடன் 14 நாட்களும் முழுமையாக பங்கேற்றவர்கள் 46தோழர்கள். ஆனால் எப்போதும் எங்கள்பயணம் நூறு தோழர்களுக்கு குறையாமலேயே இருந்தது. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பங்கேற்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. தென் மண்டல துணைத் தலைவர் க.சுவாமிநாதன் தலைமையில் 9, 10 தேதிகளில் நெல்லை,மதுரை, கோவை, சேலம் கோட்டங்களின் 140தோழர்களும், 13ஆம் தேதி வேலூர் கோட்டத்தின் 25 தோழர்களும், 19, 20 தேதிகளில் சென்னை2 கோட்டத்தின் 40 தோழர்களும், 21 அன்று சென்னை 1 கோட்டத்தின் 25 தோழர்களும் எனகாப்பீட்டு ஊழியர் சங்கத்தின் பங்கேற்பு ஒருமைல் கல் எனலாம். பொருளியல் கோரிக்கையோடு சமூக நீதிக் கோரிக்கைகளையும் இணைத்து இரண்டு கால்களில் காப்பீட்டு ஊழியர் சங்கம் மிடுக்கான நடை போட்டு முன்னேறுகிறது.
சகோதர சங்கங்களுக்கு வழி காட்டுகிறது. சுவாமிநாதன் மற்றும் மதுரைக் கோட்டத்தின் சுரேஷ்குமார், மகாலிங்கம், தணிகைராஜ், ரவி ஆகியோர் முழுமையாக 14 தினங்களும் பங்கேற்றனர். சுரேஷ்குமார் வலி நிவாரணிகளை பையில் வைத்துக் கொண்டு தானே தேய்த்துவிட்டு ஒரு மினி அன்னை தெரசாவாக தென்பட்டார். மகாலிங்கம் குழுவின் பொருளாளர். உண்டியல் வசூல் மற்றும் வெண்மணி இதழ் விற்பனை தொகைகளை கணக்குப் பார்த்து பெறுவது, வரவு/செலவுகளை பராமரிப்பது என இவரது ஓய்வு நேரங்கள்கரைந்து விடும். பணத்தை பாதுகாப்பது கூடுதல்பொறுப்பு. நடக்கும் போதும், படுத்துறங்கும் போதும் ஜோல்னா பையுடனே தான் இருப்பார்.நிறைவு நாளில் சுமார் ஒரு லட்சத்தை ஒப்படைத்து தான் ஏற்ற பொறுப்பை நூறு சதம் நிறைவேற்றி தந்தார். உண்டியல் வசூல் மற்றும் வெண்மணி விற்பனையில் ஒரு லட்சம் திரட்டப்பட்டது. தோழர்கள் சார்லஸ், அசோக்குமார், முரளி, முத்துகுமார், சேகர், சக்திவேல் ஆகியோரே உண்டியல் வசூல் பொறுப்பேற்றனர். மிக கடினமான பணி அது. நடைபயணம் சென்று கொண்டிருக்கும் சாலைகளில் தொலைவில் இருக்கும் கடைகளுக்கும், வீடுகளுக்கும் அவர்கள் சென்று திரும்ப வேண்டும். நகரங்களில் கூட்டம் துவங்கியவுடன் எல்லோரும் நாற்காலிகளில் அமர்ந்து ஓய்வெடுப்போம்.
உண்டியல் வசூல் தோழர்களோ கடை வீதி முழுவதும் வசூல் செய்து உண்டியலை நிரப்பி வருவார்கள். எப்படி பார்த்தாலும் தினசரி 5 கிலோமீட்டர் கூடுதலாக ஓய்வின்றி நடந்திருப்பார்கள். இவர்களைப் போலவே வெண்மணி இதழ் விற்பனையை பொறுப்பேற்ற தோழர்கள்சண்முக சுந்தரம், பாண்டி மற்றும் சப்தர் ஹஷ்மிகலைக்குழுத் தோழர்கள் சுமார் 2500 வெண்மணியை விற்பனை செய்து சாதனை படைத்தனர். உண்டியல் வசூல் மற்றும் வெண்மணிக்கு தலித் மக்கள் குடியிருப்புகளில் கிடைத்த அதேவரவேற்பு தலித் அல்லாதவர்கள் பகுதிகளிலும்கிடைத்தது. சாதி ஒழிப்பு பயணத்திற்கு அனைத்து பகுதிகளிலும் கிடைத்த பிரதிபலிப்புகள் மூலம் மக்களின் கருத்தோட்டத்தை அறிய முடிந்தது. மக்களின் அன்றாட வாழ்வில் சாதிதீவிர பங்காற்றுவதில்லை. அதை தொந்தரவாக கருதும் மனநிலையே மேலோங்கியுள்ளது. சாதியை ஒழிக்க முடியுமா? முடிஞ்சா அதைசெய்யனுமய்யா என்ற குரல்களை வழிநெடுகிலும் கேட்கமுடிந்தது. சிறு தொகையிலான பொருட்களை வாங்கும் போது பல கடைகளில் பணம் வேண்டாம் என மறுத்தார்கள்.
எங்களால் முடிந்த உதவி என விடை கொடுத்தார்கள். நெடுஞ்சாலையில் பறந்து கொண்டிருக்கும் கார்களும், மோட்டார் பைக்குகளும் நிற்பதும் ஐநூறு, ஆயிரம் எனநிதி தருவதும், சிறிது தொலைவு நடந்து வருவதும், செல்பியோ, புகைப்படமோ எடுத்துக் கொள்வதும் தினசரி நிகழ்ச்சிகளாகவே தொடர்ந்தன. சாதியை கைவிடுங்கள் உழைக்கும் மக்களே என மிகுந்த வீரியத்துடன் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டால் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திட முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் எமக்கு வழங்கினார்கள்.ஓடும் இரத்தத்திலேசிந்தும் வியர்வையிலேபெய்யும் மழையிலேபேசும் மொழியிலேவிற்கும் விலையிலேவாங்கும் பொருளிலேஎதிலே நமக்குள் வேறுபாடுஏழைக்கெல்லாம் ஒரே பாடுஎங்கே இருக்குது சாதிஎதிலே இருக்குது சாதி – என்ற எமது அடுக்கடுக்கான கேள்விகளை எல்லா தரப்பும்தலையசைத்து ஏற்றது. தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.அய்யன் திருவள்ளுவர், வள்ளலார், தந்தை பெரியார் என்று பெயர்கள் உச்சரிக்கப்படும் போதெல்லாம் அது இன்னமும் காந்ததுண்டுகளாக மக்களை ஈர்த்தது.
நமக்கும்மக்களுக்குமான இடைவெளி குறையுமானால் சாதி வெறியர்களை தனிமைப்படுத்தி விட முடியும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிய முடிந்தது. கம்யூனிஸ்ட்களுக்கு வாக்களிக்கவில்லையே தவிர அவர்களின் வார்த்தைகளுக்கு பொது வெளியில் பெரும்மதிப்பு இருக்கிறது; அவர்கள் மீதான எதிர்பார்ப்புகளும் எல்லையற்று இருக்கிறது.இலத்தீன் அமெரிக்க கல்வியாளர் பாலோ பிரேயர் சொல்வார், நான் ஏழைகளை மீட்கபுத்தகங்களோடும், பைபிளோடும் அவர்களின் குடியிருப்புகளுக்கு சென்றேன். அவர்களிடம் பணியாற்றும் போது தான் தெரிந்தது; அவர்களை மீட்க பைபிள் மட்டும் போதாது மார்க்சியமும் அவசியமானது என்று. ஏக்கத்துடனும், நிறைவேறாத கனவுகளுடனும் மக்கள்திரள், தங்கள் பிரச்சனைகளை இது வரை எவரும் தீர்க்கவில்லை! ஒரு ரட்சகன் வேண்டும்என்பதாகவே உள்ளது. அந்த ரட்சகன் பாலோபிரேயர் அனுபவத்தில் உணர்ந்த மார்க்சியமே. இந்திய மண்ணில் அம்பேத்கரின் துணையுடன் மார்க்சியம் கம்பீரமாக களமாட முடியும். மக்களுடனான இடைவிடாத சந்திப்புகள் எங்களை செதுக்கியது. ஒரு அனுபவப் பகிர்வு கூட்டத்தை இறுதி நாளில் நடத்தினோம். குழுவில் அதிக உடல் பருமனாக இருந்த தணிகைராஜ் நடந்ததை சிவகங்கை சுரேஷ் வியப்பாக குறிப்பிட, தணிகைராஜ் மறுமொழி தந்தார்.
‘பஸ்சில் பயணிக்கிற போது யாராவது பத்து கிலோ எடையுள்ள பொருளைக் கொடுத்து வைத்திருக்க சொன்னால் சிரமமாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு குழந்தையைக் கொடுத்தால் அது சுகமான சுமையாகத்தானே இருக்கும். அது போல தான் நடைபயணமும் சுகமான சுமை’ எத்தனை உணர்வுப்பூர்வமான பதில் இது. சமூக வலைதளங்களில் நடைப்ப யணம் முக்கிய இடத்தைப் பிடித்தது. தோழர்கள் சிவகங்கை சுரேஷ், மதன், ஐயப்பன், கவிநிலவன், செம்மல் ஆகியோரே இதற்கு காரணம். குழுவில் இடம் பெற்றிருந்த பெண்தோழர்கள் பிரியா, தனலட்சுமி, கோகிலா,ஆஷா, வர்த்தினி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.பகல் 2 மணியை நெருங்கும் போது உடல்சோர்வடையும். கால்கள் ஓய்வு தேடும். எல்லோர் முகத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு பிரியா பேனருக்கு முன்னால் சென்றுபாடலுக்கு ஏற்றவாறு நடனமாடத் துவங்குவார். எங்கிருந்து தான் இவருக்கு இவ்வளவு ஆற்றல் வருகிறதோ? என்று வியந்தவாறே களைப்பு நீங்கி நடப்போம். நிறைவு நாளில் பிரியா சொன்னார். உங்களைப் போல எனக்கும்கால் வலிக்கும். ‘அப்போது எனக்குள் சொல்லிக்கொள்வேன். பிரியா, நீ ஓட்டப்பந்தய வீராங்கனை. அது உனக்காக நீ ஓடியது. இப்போது கோகுல், சங்கருக்காக நடக்கிறாய். நட என்று’; குழுவில் இடம் பெற்ற ஒவ்வொருவரையும் இவ்வாறு குறிப்பிட முடியும். குழுவின் ஒருங்கிணைப்பாளர் யு.கே. சிவஞானம் சரியாக மூன்றுகிலோமீட்டர்களுக்கு ஒரு முறை நாங்கள் ஓய்வெடுக்கும்படியான ஒரு இடத்தை தேர்வு செய்து தாகம் தீர்க்க தண்ணீர், மோர் எனஏதாவது பானத்துடன் காத்திருப்பார். நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்திய பாலுசாமி, தங்கராசுஎன ஒருங்கிணைந்த கூட்டு உழைப்பே நடை பயணம். சேலம், விழுப்புரம் தெற்கு, விழுப்புரம் வடக்கு, தென் சென்னை ஆகிய மாவட்டங்களின் வழியே சென்றோம். சி.பி.எம் மாவட்டச் செயலாளர்கள் தங்கவேலு, எழுமலை, சுப்பிரமணியன், சங்கர், பாக்கியம் மற்றும் முன்னணியின் தலைவர்கள் ஆனந்தன், குழந்தைவேலு,தமிழ்செல்வன், சங்கரன், பாரதி அண்ணா, சுந்தரம், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் தோழர்கள் பெரும் உற்சாகத்தோடு வரவேற்றார்கள்.
தினசரி காலையில் தீக்கதிர் தரும் உற்சாகமும் அலாதியானது.தமுஎகச வின் தலைவர்கள் மதுக்கூர் இராமலிங்கம், ச.தமிழ்ச்செல்வன், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத் தலைவர்கள் வாலண்டினா, சுகந்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர்கள் செந்தில், பாலா, தீபா, இந்திய மாணவர்சங்கத்தின் தலைவர் மாரியப்பன், சி.ஐ.டி.யு எஸ்.கண்ணன், வி.தொ.ச.கே.சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டில்லிபாபு, ஆர்.ராமமூர்த்தி பீம்ராவ், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் சிவக்குமார், தயாநிதி, ஆறுமுகம், சுந்தர்ராஜ் என மிகமுக்கிய ஆளுமைகள் அவ்வப்போது பயணத்தில் பங்கேற்றதும், வாழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.திண்டிவனம் கூட்டத்தில் உடுமலை கௌசல்யா கூடியிருந்த பொதுமக்களைப் பார்த்துக்கேட்டார். ‘மக்கள் கூடியிருந்த பேருந்து நிலையம் முன்பு தானே எனது சங்கர் கொல்லப்பட்டார். தயவு செய்து கொடுமைகளை வேடிக்கை பார்க்காதீர்கள்’ கௌசல்யா தொடர்ந்து எங்களோடு சுமார் 10 கி.மீ நடந்துவந்தார். போய்வா மகளே. இனி ஒருவருக்கும் இவ்வாறு நேராது என இதயம் கசிய விடை கொடுத்தோம்.சோத்துப்பாக்கத்தில் தோழர் அருணன் பேசினார். ‘கொடுமையை எதிர்க்கிற சமூகத்தின் மனச்சாட்சி உங்களோடு நடைபயணமாக வந்திருக்கிறது, நம்பிக்கையுடன் தொடருங்கள்’ என்றார்.
சிங்கப்பெருமாள் கோவிலில்தோழர்.நல்லகண்ணு பேசினார். உச்சி முகர்ந்துபாராட்டினார். இரவு 10 மணி வரை எங்களோடு இருந்தார். மறுநாள் முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் வந்து வாழ்த்தினார். தாம்பரம் கூட்டத்தில் தோழர்.என்.சங்கரய்யாவைப் பார்த்தவுடன் கால்வலி பறந்தோடிப் போனது. எங்கள் உணர்வோடு கலந்திருக்கும் தோழர்.என்.சங்கரய்யா அவர்களே, நீங்கள் வந்து வாழ்த்துவீர்கள் என்றால் தில்லி வரை நடப்போம் என்றோம்.தோழர் என்.சங்கரய்யா பேசினார். இல்லை., கட்டளை இட்டார். ‘இனி ஒரு சாதிமறுப்பு திருமண தம்பதியினரும் உயிர்ப்பலி ஆகக் கூடாது, தேடிவரும் தம்பதிகளுக்கு நமதுதோழர்கள் முன்னின்று திருமணம் செய்து வைக்க வேண்டும். எனது வீட்டில் இல்லாத சாதி கிடையாது. நமது வீடு உண்மையான சமத்துவபுரங்களாக வேண்டும்’ என்றார்.22.06.2017 அன்று தாம்பரத்தில் இருந்து 14வது நாள் நடைபயணம் துவங்கியது. சென்னை மாநகர காவல்துறை அந்நிய நாட்டுபடையெடுப்பை தடுக்கும் முஸ்தீபுடன் பலப்பிரயோகம் நடத்தி நடைபயணக் குழுவினரையும் தோழர்.ஜி.ராமகிருஷ்ணன், பி.செல்வசிங் உள்ளிட்ட வட சென்னை, தென்சென்னை தோழர்களையும் கைது செய்தனர்.சிறை வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு பிரமுகர்கள் பலர் வந்தார்கள், வாழ்த்துச் சொன்னார்கள்.
குறிப்பாக ஜோக்கர்திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் நேரில்வந்து வாழ்த்துச் சொன்னார். இதனை கலைத்துறையில் பிரதிபலிக்க முயற்சிக்கிறேன் என வாக்குறுதி கொடுத்தார்.ஜூன்29 இல் தமிழக முதல்வரை கோட்டையில் சந்தித்தோம். சாதி ஆணவப் படுகொலை தடுத்திட தனிச்சட்டம் வேண்டும் என்ற நமது கோரிக்கையைச் சொன்னோம். பார்க்கலாம் என ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார். அதற்கு மேல் அவரிடம் நமக்கொன்றும் எதிர்பார்ப்பு இல்லை.
எமது உழைப்பாளி மக்களின் மனச்சாட்சியோடு பேசத்தானே கால்கடுக்க நாட்கணக்கில் நடந்தோம். தோழர் அருணன் குறிப்பிட்டதைப் போல் தமிழகமக்களின் மனச்சாட்சி எங்களோடு நடைபயணமாக வந்திருக்கிறது. பாதங்களின் பயணம் நிறைவடைந்திருக்கிறது. மனங்களின் பயணமோ கோட்டையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. தேவை எனில்பாதங்கள் மீண்டும் அடி எடுத்து வைக்கும். அப்பொழுது அலை அலையாய் கோட்டையை நிறைக்கும்.
(கட்டுரையாளர் : தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர்)
author avatar
Castro Murugan

Leave a Comment