ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றவர்கள் கைது: விரைவில் முக்கிய புள்ளிகளுக்கும் செக்..

கும்பகோணம்: குடந்தை அருகே காரை மடக்கி சோதனையிட்ட போலீசார், பல லட்சம் மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகளைப் பறிமுதல் செய்தனர். 5 பேர் கைது செய்யப்பட்டனர். வெளிநாடு கடத்த சிலைகள் கடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு சிலைகள் கடத்தி வரப்படுவதாக கும்பகோணம் போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. 
இதைத்தொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி கணேசமூர்த்தி தலைமையில் போலீசார், இரவில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை நடத்தினர்.
கொரநாட்டு கருப்பூர் என்ற இடத்தில் வாகன தணிக்கை நடத்தியபோது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதை மடக்கி சோதனை போட்டனர். அப்போது காரில் 3 ஐம்பொன்சிலைகள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒன்றரைஅடி உயரம் கொண்டது. அதில் 2 அம்மன் சிலைகள், ஒன்று விநாயகர் சிலை. மூன்று சிலைகளும் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை. சிலைகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
இந்த சிலைகளை கடத்தி வந்த திருச்சியை சேர்ந்த குமார், மணி, தேவகோட்டை மணி, அரியலூர் மனோ, கடலூர் விஸ்வசுந்தரம் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். சிலைகள் அரியலூர் மாவட்டத்தில் இருந்து கடத்திவரப்பட்டதாக தெரிகிறது. எந்த கோயிலில் இவை கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவில்லை. கடத்தல் தொடர்பாக ஜெயங்கொண்டத்தை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். பிடிபட்டவர்கள் சிலைகளை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும் கும்பலுடன் தொடர்புள்ளவர்கள் என போலீசார் கருதுகின்றனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment