தூத்துக்குடியில் கருப்பட்டி உற்பத்தி பாதிப்பு:தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

தண்ணீர் இல்லாமல் பனை மரங்கள் கருகி வருவதால் கருப்பட்டி உற்பத்தி இருக்காது என தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். 
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் நல்ல விவசாயம் செய்யப்பட்டு வந்தது. மேலும் வெற்றிலை, கருப்பட்டி தொழிலில் சக்கை போடு போட்டது. ஆனால் பல ஆண்டுகளாக பருவமழை கைகொடுக்காததால் நிலத்தடி நீர் மட்டம் படு பாதாளத்துக்கு சென்றது.
கடல் நீரும் ஊர் நிலத்தடிக்குள் புகுந்ததால் குடிநீரும் பாழ்பட்டது. இதனால் தென்னை உள்ளிட்ட விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்து விவசாய தொழிலாளர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு குடிபெயர்ந்து வேறு தொழிலை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. 
இதனால் வறட்சி பாதித்த பகுதியாக உடன்குடி அறிவிக்கப்பட்டது. சில ஆண்டுகள் பருவ மழை பரவலாக பெய்த போதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக பருவமழையும், கோடை மழையும் முற்றிலும் ஏமாற்றியதால் உடன்குடி, குலசேகரன்பட்டிணம், திசையன்விளை, குட்டம், உவரி மற்றும் திருச்செந்தூரை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பனை மரங்கள் கருகி வருகின்றன. இவை வறட்சியை தாங்க கூடிய மரங்கள்தான் என்றபோதிலும், தொடர் வறட்சி அவற்றையும் பாதித்துள்ளது. 
இதனால் மீண்டும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமோ, என்ற அச்சத்தில் உள்ள மக்கள் இதனை போக்க வருண ஜெபம் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். மரம் வளர்த்தல், நிலத்தடி நீரை உயர்ந்த நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடு நடந்தி வருகின்றனர். 
author avatar
Castro Murugan

Leave a Comment