ஓபிஎஸ்சின் அறிவிப்பால் பெரியகுளம் மக்கள் மகிழ்ச்சி!! கிணற்றை இலவசமாக தருவதாக ஒப்புதல்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம், பெரியகுளம், லட்சுமிபுரம் பகுதியில் தனக்கு சொந்தமான கிணற்றை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துககு சொந்தமான தோட்டத்தில் தோண்டப்பட்டுள்ள 200 அடி ஆழ கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணறு அமைக்கப்பட்ட பின்னர், அப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதாகவும், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான கிணறுகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்காக கடந்த சில நாட்களாக போராட்டமும் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதைதொடர்ந்து,ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணற்றை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால்,இருதரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையொட்டி ஆண்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனை கண்டித்து, லட்சுமிபுரத்தில் கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் அறிவித்தனர். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
இதற்கிடையில், லட்சுமிபுரம் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் ஒன்றுகூடி இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், பொதுமக்கள் தங்களது சொந்த பணம் தலா ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வசூலித்து, ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான கிணறை விலைக்கு வாங்குவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், பொதுமக்களின் தண்ணீர் பிரச்சனையை போக்குவதற்காக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு சொந்தமான கிணற்றை, பொதுமக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால், லட்சுமிபுரம் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment