ஆடைகள், தரைவிரிப்பு என்ற பெயரில் கப்பல் மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்ற ₹16 கோடி மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல்: வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி

சென்னை : ஆடைகள், தரைவிரிப்பு என்ற பெயரில் சரக்கு பெட்டகம் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல முயன்ற ₹16 கோடி மதிப்புள்ள 41 டன் செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக கைப்பற்றினர். சென்னை துறைமுகத்தில் இருந்து பெரிய சரக்கு பெட்டகம் மூலம் பல கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தப்பட இருப்பதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சில தினங்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சென்னை துறைமுகத்தில் உள்ள சரக்கு பெட்டகங்கள் கையாளும் பிரிவில் ஆக.24ம் தேதி இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னை துறைமுகத்தில் இருந்து மலேசியாவின் கிலாங் துறைமுகத்திற்கு புறப்படத் தயாராக இருந்த கப்பலில் ஏற்றப்பட்ட சந்தேகத்திற்குள்ளான சரக்கு பெட்டகத்தை மீண்டும் துறைமுகத்தில் இறக்கி வைத்தனர். அதில் தரைவிரிப்புகள் வைத்து அனுப்ப அனுமதி பெற்றிருந்தனர்.

அதில் ஆய்வு செய்த போது 2 கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மேலும் சில சரக்கு பெட்டகங்களில் செம்மரம் கடத்த உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் துறைமுக நுழைவுவாயிலில் புலனாய்வு அதிகாரிகள் காத்திருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான 2 சரக்குப்பெட்டகங்களில் ஆய்வு செய்ய முயன்றனர்.
அந்த 2 பெட்டகங்களிலும் ஆடைகள் ஏற்றிச் செல்வதாக அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால் சோதனையில் அந்த 2 பெட்டகங்களிலும் முறையே 12, 15 டன் செம்மரக் கட்டைகள் இருந்தது. மேலும் ஆக.25ம் தேதியும் அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். அப்போது மலேசியா செல்ல தயாராக இருந்த இன்னொரு கப்பலில் செம்மரக்கட்டைகள் ஏற்றப்பட்ட சரக்குப்பெட்டகம் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த பெட்டகத்தை மீண்டும் துறைமுகத்தில் இறக்கி வைத்து சோதனை செய்தனர். அதில் 3.6 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை துறைமுகத்தில் ஆக.24, 25 தேதிகளில் மேற்கொண்ட அதிரடி ஆய்வுகள் மூலம் 20 அடி நீள 4 சரக்கு பெட்டகங்களில் வைத்து கப்பல் மூலம் மலேசியாவின் கிலாங் துறைமுகத்திற்கு கடத்த முயன்ற சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள 41டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பெட்டகங்களில் ஆடைகள், தரைவிரிப்புகள் உள்ளிட்ட சரக்குகளை கொண்டுச் செல்ல அனுமதி பெறப்பட்டிருந்தது. இப்படி கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் 71 கோடி ரூபாய் மதிப்புள்ள 176 டன் செம்மரக் கட்டைகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திராவின் கடப்பா, சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படும் செம்மரங்களை வெளிநாட்டு வணிகம்( வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் -1992, சுங்கச் சட்டம்-1962 ஆகியவற்றின்படி அனுமதியின்றி ஏற்றுமதி செய்வது, கடத்துவது குற்றமாகும். எனவே, வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் போலி பெயரில் செம்மரக்கட்டைகளை கடத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். 

author avatar
Castro Murugan

Leave a Comment