‘ரஜினிகாந்தை தாராவிக்கு அழைத்து வந்தது ஒரு சரித்திரம்’..!

“தாரவினா எல்லாரும் குப்பைனுதான் நெனப்பாங்க. இது எங்க கதை. என்னைக்கு எங்க கதைய நீங்க கேட்டு தெரிஞ்சுக போறீங்க?” என்கிறார் நம்மை இந்த வீடியோவின் மூலம் தாரவிக்குள் அழைத்துச் செல்லும் வெண்ணிலா. தாராவியில் பிறந்து வளர்ந்தவரான இவர். காலா படத்தில் ப்ரொடக்‌ஷனில் டீமில் ஒருவராக வேலை செய்தவர்.

காலா படத்தில் சினிமா செட்டாக  நாம் பார்த்த  தாராவியை நிஜத்தில் காட்டுகிறது கிரீஸ்மா ராய் இயக்கியிருக்கும் இந்த வீடியோ.  தாராவியை எப்படி நாம் படத்தில் பார்த்தமோ அதைப் போலவே குறுகிய சந்துகளும், சிறிய வீடுகளும், திருநெல்வேலி தமிழ் பேசும் வாஞ்சையான மனிதர்களும் கருப்பு கண்ணாடியோடு ‘தொள தொள’வென்று பெரிய சட்டை அணிந்து தாடியுடன் ஹிப் ஹாப் பாடும் இளைஞர்களால் நிறைந்திருக்கிறது.

“தாராவினா தமிழ்நாடுதான்” என்கிறார் சண்முகராஜன். தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு ஆள் தேவைப்பட்டபோது தமிழகத்தின் திருநெல்வேலியிலிருந்து ஆட்களை கொண்டு வந்தார்கள் என்று தமிழர்கள் புலம் பெயர்ந்த வரலாற்றை சொல்கிறார் இவர்.

“ரஜினிகாந்தை தாராவி கிராஸ் ரோடிற்கு அழைத்துவந்தது ஒரு சரித்திரம். அதை ரஞ்சித் செய்திருக்கிருகிறார். ரஞ்சித்துக்கு தாரவியிலிருந்து பெரிய சல்யுட் ” என்கிறார் ஹிப் ஹாப் பாடகரும், அடுத்த தலைமுறை ஹிப் ஹாப் கலைஞர்களை தயார்படுத்தி கொண்டிருக்கும் டோப்டாடி. எழுபதுகளில் தோன்றி அமெரிக்காவில் கறுப்பின மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களை கலையாக பிரதிபலித்த ஹிப் ஹாப்  இசை தாராவி இளைஞர்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த ஒன்று என்பதை இந்த வீடியோ சொல்கிறது.

தாராவி, இங்கிருக்கும் தமிழர்களின் இன்னொரு தாய் மண். இந்த மண்ணை காப்பதற்கு உயிரையும் கொடுக்கவேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட பிள்ளைகளும், ஹிப் ஹாப் மூலம் புரட்சி பேசும் இளைஞர்களும், கடினமாக உழைத்து முன்னேறி மூன்று தலைமுறையாக வாழ்ந்து  கொண்டிருக்கும் தமிழ் மக்களுமாக மும்பை மண்ணில் நிறைந்திருக்கிறது தாராவி.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment