செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் சாப்பிட்டால் இத்தனை தீமைகளா?

மாம்பழத்தை செயற்கையாக பழுக்க வைத்து அதனை சாப்பிட்டால் உடலில் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முக்கனிகள் என்று அழைக்கப்படுவது மா, பலா, வாழை. அதில் முதன்மையான மாம்பழத்தை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். மேலும் இது நமது நாட்டின் தேசியக் கனியாகவும் உள்ளது. இந்த பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக உண்ணக்கூடிய ஒரு பழம். அதுமட்டுமல்லாது இதன் சுவை அனைவரையும் கவர செய்யும். இந்த பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் அந்த காலத்தில் புத்தபிட்சுகளுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகளில் மாம்பழமும் ஒன்று.

அந்த அளவு விசேஷமான இந்த மாம்பழத்தை கோடைகாலம் வந்தவுடனேயே பழக்கடைகளில் அதிகமாக இதனை காணமுடியும். அதுமட்டுமல்லாமல் சாலையோர தள்ளுவண்டி கடைகள், சந்தைகள், பல்பொருள் அங்காடி என எல்லா வகை கடைகளிலும் மாம்பழ விற்பனை அமோகமாக நடைபெறும். இதனை வாங்குவதற்கும் பல்வேறு மக்கள் கூடுவார்கள். மாம்பழத்தை விவசாயிகள் இயற்கையாகவே பழுக்க வைக்க பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைப்பது என்பது அதிகப்படியான இடங்களில் நிகழ்வதில்லை.

இதனை கார்பைடு கல் மூலம் வியாபாரிகள் பழுக்க வைக்கிறார்கள். மேலும் இதனை இப்படித்தான் பழுக்க வைக்க முடியும் வேறு வழியில் பழுக்க வைக்க முடியாது எனவும் வியாபாரிகள் தெரிவித்துக் வருகிறார்கள். ஆனால் இயற்கையாகவே பல்வேறு வகைகளில் விவசாயிகள் மாம்பழத்தை பழுக்க வைத்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு முறையில் பழுக்க வைத்திருந்தால் அது ஆரோக்கியமான பழமாக இருக்கும். உதாரணத்திற்கு மரத்திலேயே பழுத்து பிறகு மாம்பழத்தை அறுவடை செய்யலாம்.

ஒருவேளை பறித்த மாம்பழத்தில் பால் வடிந்தால் தரையில் ஒரு பழைய பேப்பரை விரித்து அதன் மீது பால் வடிந்த பழங்களை போட்டு வைத்தால் அது விரைவில் பழுத்துவிடும். அதிகமான மாம்பழங்கள் இருந்தால் அதை ஒரு இருட்டான அறையில் போட்டு அங்கு புகை மூட்டம் அளித்தால் எளிமையாக மாம்பழங்கள் பழுத்துவிடும். இது ஒரு பழமையான முறையாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்தபடியாக விவசாயிகள் அவரவர் பகுதிகளில் எந்த இலை எளிதாக கிடைக்கிறதோ உதாரணத்திற்கு ஆவாரம் இலை அல்லது வேப்ப இலை என எது கிடைக்கிறதோ அவற்றை அந்த மாம்பழங்களில் மூடி போட்டு பழுக்க வைக்கிறார்கள்.

வீட்டில் இருப்பவர்கள் அரிசி பாத்திரத்திலேயே மாம்பழங்களை போட்டு பழுக்க வைக்கிறார்கள். மேலும் புகைப்போடாமல் வைக்கோல் பயன்படுத்தி பழுக்க வைப்பார்கள். இப்படி பல்வேறு வகைகளில் இயற்கையாகவே மாம்பழங்களை பழுக்க வைக்க முடியும். ஆனால் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்தால் பல்வேறு வகையான ஆபத்து உடலில் ஏற்படும். ஏனென்றால் இதன் மூலம் பழுக்க வைத்தால் பல நாட்கள் வரை மாம்பழங்கள் பழுத்த மஞ்சள் நிறத்திலேயே காட்சியளிக்கும்.

விரைவில் கெட்டுப் போகாது. இதனால் உடலில் பல்வேறு கேடுகள் ஏற்படும். உதாரணத்திற்கு செயற்கையான முறையில் இதனை பழுக்க வைத்தால் அந்த பழங்களை நாம் சாப்பிட்டு வந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, தலை சுற்றல், குமட்டல் போன்றவை ஏற்படும். அதனால் இயற்கையான முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை தேர்வு செய்வது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும்.

Leave a Comment