நீதியை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் திரையுலக பிரபலங்கள்.!

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு ஆதரவாக உண்மையை கூறிய ரேவதி உட்பட நீதியை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாகவே முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் காவலர் ரேவதி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை போலீசார் லத்தியால் விடிய விடிய அடித்தார்கள் என்றும், டேபிள் மற்றும் லத்தியில் ரத்தக்கறை படிந்திருந்ததாகவும், நடந்ததை எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன் என்றும் தைரியமாக நேற்று மதுரை நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் கூறியுள்ளார். மேலும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், மதுரை உயர்நீதிமன்றத்தினர் ஆகியோர் நீதியை நிலைநாட்ட போராடி வருகின்றனர். இதனால், இவர்களது உண்மைத் தன்மையை பாராட்டி பிரபலங்கள் உட்பட பலர் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, சாத்தான்குளம் இரட்டை கொலையில் நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து இயக்குனரான வெற்றி மாறன் கூறியதாவது, மாண்புமிகு நீதிபதிகளான பி. என். பிரகாஷ், பி. புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தைரியமான ரேவதி ஆகிய நீங்கள் அனைவரும் எங்களுக்கு நம்பிக்கையை தந்தீர்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். தற்போது இவர்கள் ட்வீட்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.