உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள்!

உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு “கண்ணீர் அஞ்சலி” போஸ்டர் ஒட்டிய சம்பவம், பெரம்பலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெரம்பலூர், மேட்டுத்தெருவை சேர்ந்தவர், செல்வராஜ் இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரோஷ்னி@அம்மு என்ற மகளும் உள்ளனர். 23 வயதாகும் ரோஷ்ணிக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டு கொட்டகை எனும் கிராமத்தை சேர்ந்த தனது
தாய்மாமன் மகனான வீரராகவன் என்பவருடன் கடந்த 2018, மே மாதம் திருமணம் நடந்தது.

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வீரராகவன், குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கணவனை பிரிந்த ரோஷ்னி, தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். ரோஷ்னியின் திருமணத்தின்போது அவரின் பெற்றோர் 43 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். அதனை திரும்பிக்கேட்டபோது, கணவர் குடும்பத்தினர் கொடுக்க மறுத்தனர்.

இந்தநிலையில் ரோஷினி உயிரிழந்துவிட்டதாக கூறி கணவர் வீட்டார்கள் பெரம்பலூர் நகர் முழுவதும் நேற்று முன்தினம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டினார்கள். இதனை கண்ட அவரின் உறவினர்கள், தோழிகள் என பலரும் துக்கம் விசாரிக்க ரோஷினி வீட்டிற்கு சென்றனர்.

அங்கு ரோஷ்னி உயிருடன் இருப்பதை பார்த்து அவர்கள் திகைத்துப்போயினர். இது, ரோஷ்னி குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரோஷினியின் தந்தை பெரம்பலூர் போலீசாரிடம் புகாரளித்தார். இதனை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.