ஆசிரியர் தினம் 2022: சமூகத்தில் ஆசிரியர்களின் பங்களிப்புகளின் முக்கியத்துவம்..

ஆசிரியர் தினம்: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 அன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5, 1888 இல் ஒரு ஏழை தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது பெரும்பாலான கல்வியை உதவித்தொகை மூலம் முடித்தார். தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, அவர் 1931 முதல் 1936 வரை ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், மதன் மோகன் மாளவியாவுக்குப் பிறகு 1939 இல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) துணைவேந்தராகவும் பணியாற்றினார். அவர் 1917 இல் ‘ரவீந்திரநாத் தாகூரின் தத்துவம்’ என்ற புத்தகத்தையும் எழுதினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னையின் பிரசிடென்சி கல்லூரி மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

கற்பித்தல் மற்றும் சமூகத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, 1963 ஆம் ஆண்டில், அவர் பிரிட்டிஷ் ராயல் ஆர்டர் ஆஃப் மெரிட்டின் கௌரவ உறுப்பினராக அனுமதிக்கப்பட்டார். டாக்டர் ராதாகிருஷ்ணன் மாணவர்களிடையே புகழ் பெற்ற ஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக பணியாற்றிய போது, ​​1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி அவரது பிறந்தநாளைக் கொண்டாட அவரது மாணவர்கள் அவரை அணுகியதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, அவர்களின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் அந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுமாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் தனது வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருந்தார். அவரைக் கெளரவிப்பதற்காக மட்டுமல்ல, நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும் இந்த நாள், ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், கற்பித்தல் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ‘தேசிய ஆசிரியர் விருதுகள்’ வழங்கி ஜனாதிபதி கௌரவிக்கிறார்.

 

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment