,
Diwali 2023 History

வடமாநில திருவிழாவா தீபாவளி.? தமிழ் அறிஞர்கள் கூறும் வரலாற்று குறிப்புகள்…

By

வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளிக்கு உருவான வரலாறு குறித்து பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அவை அனைத்தும் வட மாநிலங்களை சார்ந்து குறிப்பிடப்பட்டவகையாக உள்ளது. இந்த பண்டிகை எவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கம் தற்போது வரை இல்லை.

தீபாவளி புறக்கணிப்பு :

தமிழகத்தின் உள்ள பல்வேறு கட்சியினர் குறிப்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட தீபாவளி பண்டிகையை தினத்தை கொண்டாடுவதில்லை. இது தமிழரின் பண்டிகை இல்லை என பலர் கூறி தீபாவளி பண்டிகையை புறக்கணிப்பதுண்டு.

தமிழர் திருநாள் தைப்பொங்கல் :

தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒருசேர கொண்டாடும் பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை தான். அறுவடை திருநாளாக பொங்கல் தினமானது எந்தவித பட்டாசு மாசு இல்லாமல், தமிழர்கள் நேரடியாக பலனடையும் வண்ணம் அரிசி, காய்கறிகள், மண்பானைகள் என அனைத்தும் தமிழர்களின் மரபு சார்ந்து தமிழர்களின் வர்த்தகம் சார்ந்து, மதங்கள் கடந்து கொண்டாடப்படும் விழாவாக தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி அப்படி இல்லை. இந்து மதத்தினர் மட்டும் கொண்டாடும் திருவிழாவாக உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

தமிழறிஞர்கள் கூறிய கருத்துக்கள்…

தீபாவளி பற்றி மறைமலை அடிகள் கூறும்போது, ஆரிய பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனை கதையே தீபாவளி என்று குறிப்பிட்டார். ஆரியர்கள் கூறும் அசுரன் இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களை ஆரியர்கள் அரக்கர்கள் என்று இழிந்து பேசுகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

விவேகானந்தர் கூறுகையில், தென்னிந்தியாவில் இருந்த மக்களை ராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் குறிப்பிடபட்டு இருந்தனர். அந்த ராமன் ராவணனை கொன்று வனவாசம் சென்று திரும்பிய நாள் தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

முனைவர் பரமசிவம் எழுதிய ‘அறியப்படாத தமிழகம்’ எனும் நூலில், தமிழர் மரபு வழி பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளுடன் தொடர்பில்லாத ஒரு திருவிழா தீபாவளி. தீபாவளி அன்று வெடிக்கப்படும் பட்டாசு கலாச்சராமானது 15ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் அறிமுகமாகவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் கூறுகையில், தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டம் தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது. திராவிடர்கள் ஆரியர் இனத்திற்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, விடுதலை பெற விருப்பமில்லாத கூட்டம் என்பதை காட்டிக்கொள்ள கொண்டாடப்படும் விழா தான் தீபாவளி என காட்டமாக தனது கருத்தை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023