Tamilnadu Farmers

தமிழக விவசாயிகள் கவனத்திற்கு… அரசின் முக்கிய அறிவிப்பு.!

By

சென்னை: தமிழக விவசாயிகள் உடனடியாக குறுவை பருவ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக விவசாயிகள் தங்கள் குறுவை பயிர்களை வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் உரிய முறையில் கட்டணம் செலுத்தி பயிர் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய தமிழக வேளாண்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

2024-2025ஆம் ஆண்டில் குறுவை, சம்பா மற்றும் கோடை ஆகிய மூன்று பருவங்களிலும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். 2024 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ஆம் நிதி ஆண்டின் வேளாண்துறை நிதிநிலை அறிக்கையில் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் என அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்டங்களில் 2024-2025 ஆம் ஆண்டில் குறுவை, சம்பா, நவரை / கோடை ஆகிய மூன்று பருவங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேளாண்துறை கடந்த ஜூன் 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

2024ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள். பருத்தி, சாமை மற்றும் கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களுக்கும் வாழை,
மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு. கேரட், கத்திரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் முட்டைகோஸ் ஆகிய 12 தோட்டக்கலைப் பயிர்களும் இதில் அடங்கும்.

குறுவை பருவ பயிர்களுக்கான காப்பீட்டை விவசாயிகள் கடந்த ஜீன் 21ஆம் தேதி முதல் மத்திய அரசின் தேசிய பயிர்காப்பீட்டு வலைதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது.  இதில் முக்கிய பயிரான குறுவை நெற்பயிரை வரும்  ஜீலை 31 ஆம் தேதி வரை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின்கீழ் மகசூல் இழப்பு, விதைப்பு / நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு / நடவு பொய்த்தல், பகுதி
சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற காரணங்கள் கொண்டு காப்பீடு செய்யப்படுகின்றன.

எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும். பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு அருகிலுள்ள பொது சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், புயல், வெள்ளம் ஆகியவற்றால் பயிர் சேதம் அடைந்த பிறகு அப்பயிரை காப்பீடு செய்ய இயலாது
எனவும், காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை எக்காரணம் கொண்டும் நீட்டிக்க வழிவகையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023