,
ENGvRSA

அட்டகாசமான பந்து வீச்சில் திரில்லாக இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா ..!

By

டி20I சூப்பர் 8:  நடந்து கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றின் போட்டியும், இத்தொடரின் 45-வது போட்டியுமான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி அதிரடியுடன் ஆரம்பித்தாலும் மிடில் ஓவர்களில் சற்று விக்கெட்டுகளை இழந்து நிதானமாகவே விளையாடினர்.

இதனால், 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா அணியில் டி காக் 38 பந்துக்கு 65 ரன்கள் எடுத்தார். அவருக்கு பின் டேவிட் மில்லர் 28 பந்துக்கு 43 ரன்கள் விளாசி இருந்தார்.

அதனை தொடர்ந்து 164 என்ற இலக்கை எடுக்க இங்கிலாந்து அணி களமிறங்கியது. நன்றாக பேட்டிங்கை தொடங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை எடுக்க தடுமாறியது.

அதன்பின் லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஹாரி புரூக் இருவரும் அற்புதமான ஒரு கூட்டணியை அமைத்து சரிவிலிருந்து அணியை மீட்டெடுத்தனர். இறுதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி அங்கும், இங்கும் மாறி மாறி சென்றது.

அதிரடியாக விளையாடி கொண்டிருந்த லிவிங்ஸ்டோன் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க போட்டி மேலும் விறுவிறுப்பாக சென்றது. கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க வேண்டி இருந்த நிலையில் முதல் பந்திலேயே சிறப்பாக அரை சதம் அடித்து ஆடிக்கொண்டிருந்த ஹாரி புரூக் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து களத்தில் இருந்த சாம் கர்ரன், நோர்கியாவின் பந்தை அடிக்க முடியாமல் கோட்டை விட்டார். விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியின் கடைசி ஓவரை சிறப்பாக வீசி நோர்கியா தென்னாபிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தார்.

இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று சூப்பர் 8 சுற்றின் இரண்டவது வெற்றியையும் பெற்று அரை இறுதி சுற்றுக்கு ஒரு காலை எடுத்து வைத்துள்ளனர்.

Dinasuvadu Media @2023