மாநிலங்களுக்கு ₹.12,000 கோடி கடன்… மத்திய அரசு அறிவிப்பு..

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்க மாநில அரசுகளுக்கு ரூ. 12,000 கோடி ரூபாயை  வட்டியில்லா கடனாக  வழங்குவதாகவும், அதனை திருப்பி செலுத்த 50 ஆண்டு கால அவகாசம் அளிப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை  கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கினால் சரிவடைந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடி ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதார நிதித் தொகுப்பை கடந்த மே மாதம் அறிவித்தார். இதுகுறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அந்த அறிவிப்பில், சிறு, குறு தொழில் துறையினர், விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், மீனவர்கள், நிலக்கரி, சுரங்கம், ராணுவ உற்பத்தி, விண்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், மின்சார விநியோகம், அணு ஆற்றல், விமானப் போக்குவரத்து, பணப்புழக்கம், தொழிலாளர் நலன், மருத்துவம், மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டம், கல்வி, பொதுத்துறைக்கான புதிய திட்டங்களை வெளியிட்டார். அதில்,  மாநில அரசுகளுக்கு ரூ.12,000 கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்படும். இந்த கடனை மாநில அரசுகள் திருப்பி செலுத்த 50 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படும். ஆனால், 50 ஆண்டுகளுக்கு பிறகு, மாநில அரசுகள் இதனை ஒரே தவணையில் திருப்பி செலுத்த வேண்டும்.

  • இந்த நிதியில் ரூ.1,600 கோடி வடகிழக்கு மாநிலங்களுக்கும்,
  • ரூ. 900 கோடி உத்தரகாண்ட், இமாச்சல் மாநிலங்களுக்கும்,
  • ரூ. 2,000 கோடி மாநிலங்கள் முன்கூட்டியே அறிவித்த திட்டங்களுக்கும்,
  • மீதமுள்ள ரூ. 7,500 கோடி இதர மாநிலங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

மாநிலங்கள் பெறும் இந்த கடன்தொகை முழுவதும் புதிய அல்லது ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மூலதன திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நிதியைக் கொண்டு மாநில அரசுகள் அதன் ஒப்பந்ததாரர்கள், வினியோகஸ்தர்களின் நிலுவைத் தொகையை செலுத்த பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

author avatar
Kaliraj