DU Admission: யூஜி படிப்பிற்கு ஒரே நாளில் 57ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்!

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கிய ஒரே நாளில், யூஜி படிப்பிற்காக 57,312 பேர் விண்ணப்பித்துள்ளதாக டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சில மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இந்தியாவிலே முதல் முறையாக டெல்லி பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் முலமாக நடத்தி வருகிறது. இதில் மாணவர்கள் முன்பதிவு முதல் ஆவணங்கள் வரை அனைத்தையும் இணையத்தளத்திலே நடத்தி வருகின்றனர்.

இந்த மாணவர் சேர்க்கை, ஜூன் 20ஆம் தேதி தொடங்கி, ஜூலை 4ஆம் தேதி முடிவடைகிறது. அதுமட்டுமின்றி, மாணவர் சேர்க்கை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், ஜூன் 23 ஆம் தேதி காலை 11 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும் இணைய கருத்தரங்கில் கேட்டுக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.

இந்நிலையில், மாணவர் சேர்க்கை தொடங்கிய ஒரே நாளில், யூஜி படிப்பிற்காக 57,312 பேர் விண்ணப்பித்துள்ளதாக டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், 18,837 மாணவர்கள் முதுகலை படிப்பிற்கும், 2,071 பேர் பிஎச்டி சேர்க்கைக்கும் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.