பாதுகாப்பான பயணத்திற்கு ரயிலுக்குள் வடிவமைக்கப்பட்ட புது அம்சங்கள்.! ஹேண்ட்ஃப்ரீ வசதிகளுடன் இந்திய ரயில்வே.!

இந்திய ரயில்வே கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாப்பாக பயணிகள் பயணம் செய்ய ஹேண்ட்ஃப்ரீ வசதிகள், பிளாஸ்மா காற்று சுத்திகரிப்புக்கான ஏற்பாடுகள், டைட்டானியம் டை ஆக்சைடு மேல்பூச்சு என புதிய அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் வகையில் இந்திய ரயில்வே பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய கபூர்த்தலா ரயில்பெட்டி தொழிற்சாலையின் இந்திய ரயில்வே உற்பத்தி கூடம் கொரோனா வைரஸூக்கு பிந்தைய ரயில்பெட்டியை உருவாக்கியுள்ளது. இந்த பெட்டியில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கும் வகையில் பிளாஸ்மா காற்று சுத்திகரிப்புக்கான ஏற்பாடுகள், கைகளை பயன்படுத்தி தொடாமல் இருப்பதற்கான வசதிகள், செம்பு முலாம் பூசப்பட்ட கைப்பிடிகள், தாழ்ப்பாள்கள், டைட்டானியம் டை ஆக்சைடு மேல்பூச்சு என கொரோனா வைரஸ் கிருமிகள் இல்லாத வகையில் பயணிகள் நிம்மதியாக பயணம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிறப்பு பெட்டியின் அம்சங்கள் என்னவென்றால் கழிவறை கதவுகளை வெளியே நின்று பாதத்தால் இயக்க முடியும், மேலும் தண்ணீர், சோப்பு நுரைகளை வெளியேற்றும் பிளஷ் வால்வையும், கழிவறை கதவின் தாழ்ப்பாளையும் கைகளை பயன்படுத்தாமல் பாதத்தை கொண்டு பயன்படுத்தலாம். மேலும் முழங்கையால் ரயில் பெட்டியில் கதவின் கைப்பிடியை இயக்கலாம்.

அதனையடுத்து செம்பு முலாம் பூசப்பட்ட கைப்பிடிகள் மற்றும் தாழ்ப்பாள்கள் மூலம் நாம் தொடுவதால் பரவும் கொரோனா வைரஸ்களை சில மணி நேரங்களில் வீரியம் இழக்க செய்ய செம்பு உதவும். ஏனெனில் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மையை கொண்டது செம்பு. அதனையடுத்து, பிளாஸ்மா காற்று சுத்திகரிப்பு வசதிகள், ரயில் பெட்டிக்குள் உள்ள ஏ. சி. குழாயில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்மா காற்று உபகரண வசதி ரயிலுக்குள் உள்ள கிருமிகளை அழித்து, அவை ஏசி பெட்டியில் அயனியாக்கம் செய்யப்பட்ட காற்றை வெளியிடுகிறது.

அவை பயணிகளை கொரோனா வைரஸ் மற்றும் மற்ற கிருமி வகைகளிலிருந்து பாதுகாக்க எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது . நச்சுத்தன்மையற்ற டைட்டானியம் டை ஆக்சைடு மேல்பூச்சு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா, பூசணம் மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை கொன்று, உட்பற காற்றின் தரத்தை உயர்த்தும்.

சி. இ. சான்றிதழ் வழங்கப்பட்ட டைட்டானியம் டை ஆக்சைடு மேல்பூச்சு வாஷ்பேசின்கள், தாழ்ப்பாள்கள், கழிவறைகள், இருக்கைகள் மற்றும் படுக்கைகள், நொறுக்குதீனி மேசை, கண்ணாடி ஜன்னல், தரைகள் என ஒவ்வொன்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒளிச்சேர்க்கை பொருளாக பயன்படுத்தப்படும் இதன் ஆயுட்காலம் 12 மாதங்களே ஆகும்.