இன்ஸ்டாகிராமில் புதிய வசதி மெசேஜ் மூலமாகவே பொருட்களை வாங்கலாம் !

இன்ஸ்டாகிராம் மெட்டாவின் நியூஸ்ரூம் வழியாக புதிய “பேமெண்ட்ஸ் இன் சேட்” அம்சத்தை இன்று அறிவித்தது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் இப்போது சேட் பக்கத்தில் மெட்டா பே -ஐ பயன்படுத்தி சிறு வணிகங்களிலிருந்து பொருட்கள் வாங்கலாம்.

இன்ஸ்டாகிராம் மக்களை இணைக்க உதவுகிறது. இது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இடையே மட்டுமல்லாமல் மக்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுகிறது. இனி இன்ஸ்டாகிராம் சேட் பக்கத்தில், மெட்டா பே மூலம் பணம் செலுத்தவும், தங்கள் ஆர்டரைக் கண்காணிக்கவும் மற்றும் ஆர்டர் குறித்து கேள்விகளையும் கேட்க முடியும். இந்த அம்சம் அமெரிக்காவில் உள்ள சிறு வணிகங்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களுடன் உரையாடலாம்.பின்பு,நீங்கள் அந்த பக்கத்தை விட்டு வெளியேறாமலே  நீங்கள் விரும்பும் பொருட்களை  வாங்க முடியும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு கைப்பையில் ஆர்வமாக இருந்தால், கைப்பைப் பற்றிய கட்டண விவரத்தை அதை விற்பவருடன் உரையாடி அந்த பக்கத்திலே நீங்கள் மெட்டா பே-ஐ பயன்படுத்தி, பணம் செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்து நீங்கள் நம்பிக்கையுடன் ஷாப்பிங் செய்யலாம் என  மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பொருட்களை வாங்குவதற்கான ஒரு வழியாக டிஜிட்டல் ஸ்டோர் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

இணையம் மற்றும் மெட்டாவேர்ஸின் அடுத்த அத்தியாயத்தை நோக்கிப் பார்க்கும்போது, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் மெசேஜ் மூலமாகவே(Chat) பணம் செலுத்துதல் போன்ற புதிய அம்சத்தை வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment