Connect with us

கள்ளக்குறிச்சி துயரம் : அரசின் அலட்சியப்போக்கே உயிரிழப்புக்குக் காரணம் – பா.ரஞ்சித் கடும் கண்டனம்!

pa ranjith

சினிமா

கள்ளக்குறிச்சி துயரம் : அரசின் அலட்சியப்போக்கே உயிரிழப்புக்குக் காரணம் – பா.ரஞ்சித் கடும் கண்டனம்!

கள்ளக்குறிச்சி : விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம் என இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் என பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குனர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்ததோடு, கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிருப்பதாவது ” கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்” என பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

Continue Reading

More in சினிமா

To Top