“ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ.10,775 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்”- அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ.10,775 கோடியை உடனே வழங்க மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது தொடா்பான 42 ஆம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், காணொளி மூலம் கலந்துகொண்டார். அதில் உரையாற்றிய அமைச்சர், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்த விவகாரத்திற்கு ஒரு சுமுக முடிவினை காண்பதற்கு எடுத்துவரும் முயற்சிக்கு நன்றி செலுத்துவதாக கூறினார்.

மேலும், கொரோனா பரவும் இந்த சூழலில், ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என தமிழக அரசு கவனம் கொண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் முதலாவது விருப்பத் தேர்வை ஏற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு கண்டு, உடனே மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்கினால், பொருளாதாரத்தை புதுப்பிக்க முடியும்.

தமிழகத்துக்கு கடந்த வாரம் இழப்பீடாக ரூ.1,483 கோடி வழங்கியதற்கு நன்றி தெரிவித்த அவர், கடந்த ஜூலை வரையிலான தமிழகத்துக்கு வழங்கிய இழப்பீட்டு தொகையான ரூ.10,774.98 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி, 2017-2018 ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.4,321 கோடியை விரைவில் வழங்க உறுதியளித்தற்க்கும் நன்றி தெரிவித்தார்.