இனி 5 பேருக்கு மேல் ஒரு செய்தியை பகிர முடியாது.. பேஸ்புக் நிறுவனம் அதிரடி!

மெசஞ்சர் செயலியில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் அல்லது ஐந்து குழுக்களுக்கு மட்டுமே ஒரு செய்தியை பகிர முடியும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் உபயோகித்து வரும் செயலி, பேஸ்புக். இந்த செயலி மூலம் தொடர்ந்து தவறான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்துகொண்டே வந்தது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொதுத் தேர்தல்களை நடத்தத் தயாராகி வருவதால், தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் அதிகளவில் பரவும் நிலையில், இதனை தவிர்ப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், வாட்ஸ்அப் செயலியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போன்றே, பேஸ்புக் மெசஞ்சரிலும் அறிமுகப்படுத்த போவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியது. அது, ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் அல்லது ஐந்து குழுக்களுக்கு மட்டுமே ஒரு செய்தியை பகிர முடியும் என தெரிவித்தது.

இந்த புதிய வசதி, கொரோனா பற்றிய தவறான தகவல் அல்லது தீங்கு விளைவிக்கும் தகவல்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதாகவும், வாட்ஸ் ஆப் செயலியில் விதிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறை பயனர்களிடமிருந்து பெரியளவில் எதிர்ப்புகளை பெறவில்லை. இந்த நிலையில், இந்த புதிய விதிகளை பேஸ்புக் நிறுவனம், தனது மற்ற செயலிகளிலும் அமல்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியானது.