“ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் தங்களின் சொந்த செலவிலேயே நாடு திரும்ப வேண்டும்”- ஆஸ்திரேலிய பிரதமர்!

ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்றால், தனி விமானம் மூலம் தங்களின் சொந்தச் செலவில் நாடு திரும்பலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3 லட்ச பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கும் மத்தியில் பாதுகாப்பான முறையில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் விமானங்கள் அனைத்திற்கும் மே 15-ம் தேதி வரை தடை விதித்து ஆஸ்திரேலியா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு, உடனடியாக அமலுக்கு வந்தது. தற்பொழுது ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள், கொரோனா அச்சம் காரணமாக நாடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவரிடம் அரசு சார்பில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்குத் தனி விமானம் ஏற்பாடு செய்யப்படுமா? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையிலே பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர், ஐபிஎல் தொடர் ஆஸ்திரேலியா தொடரின் ஒரு பகுதியாக இல்லை என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், வீரர்கள் தங்களின் சொந்த செலவிலே வீரர்கள் இந்தியா சென்றடைந்த காரணத்தினால், அவர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்றால் தனி விமானம் மூலம் தங்களின் சொந்தச் செலவில் நாடு திரும்பலாம் என்று தெரிவித்துள்ளார்.