4வது சம்மனுக்கு திட்டம்! பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய 3 சம்மன்கள் தொடர்பான விசாரணைக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், 4வது முறையாக சம்மன் அளிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று முறை சம்மன் அனுப்பியும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், அவரை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இருப்பினும்,  நான்காவது முறை சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நான்காவது சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாவிட்டால் கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.  அரவிந்த் கெஜ்ரிவாலை இன்றே கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

கைது செய்யப்படுகிறாரா..? கெஜ்ரிவால் இல்லம் முன்பு போலீஸ் குவிப்பு..!

கெஜ்ரிவால் இல்லத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சூழலில், டெல்லி மதுபான முறைகேடு புகார் தொடர்பாக தனக்கு எந்த ஆதாரத்தையும் அமலாக்கத்துறை காட்டவில்லை என கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எனக்கு எதிராக எந்த ஆதாரமும் அமலாக்கத்துறை காட்டவில்லை. அமலாக்கத்துறை சம்மன் பொய்யானவை.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகளை பயன்படுத்தி என்னை கைது செய்ய பாஜக விரும்புகிறது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, பாஜகவில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன் சட்டபூர்வமானதாக இருந்தால் ஒத்துழைப்பு அளிக்க தயார் என்று தெரிவித்தார்.

மேலும், பாஜக செயல்பாடுகள் ஜனநாயக விரோதம் எனவும் கண்டம் தெரிவித்தார். மேலும், பாஜகவினர் ஊழலில் ஈடுபட்டால் மத்திய விசாரணை அமைப்புகள் கண்டுகொள்வதில்லை என்றும் வரும் தேர்தலில் நான் பிரச்சாரம் மேற்கொள்வதை தடுக்க பாஜக இவ்வாறு செய்கிறது எனவும் குற்றச்சாட்டியுள்ளார்