துருக்கியில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்.! 11 பேர் பலி.!

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை துருக்கி நாட்டில் பிட்லிஸ் மாகாணத்தில் துருக்கி படைப்பிரிவை சேர்ந்த குழுவினர்கள் தங்கள் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சிக்காக சென்றுள்ளனர் .இவர்கள் குர்திஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க போராடுபவர்களை எதிர்கொள்ளும் ராணுவ படை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பயிற்சிக்கு சென்ற அந்த ஹெலிகாப்டரில் லெப்டினன்ட் ஜெனரல் உட்பட பல ராணுவ வீரர்கள் இருந்த நிலையில் ஹெலிகாப்டர் பிட்லிஸ் மாகாணத்திலிருந்து புறப்பட்ட அரை மணி நேரத்தில் கட்டுபாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகவும் ,அதன் பின் நடத்திய தேடுதல் வேட்டையில் பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள பனிமலை பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரிய வந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஒஸ்மான் எர்பாஸ் உட்பட 9 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ,4 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதன் பின் வியாழக்கிழமை பிற்பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துருக்கி ஜனாதிபதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதே போன்று ஐரோப்பிய தூதரகமும், அமெரிக்க தூதரகமும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்ததுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.மேலும் இந்த விபத்தானது நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் மூடு பனி காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும்,அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.