நீதிமன்றங்களில் அம்பேத்கர் படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும்..! பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

நீதிமன்றங்களில் அம்பேத்கர் உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர் மற்றும் காந்தி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டதை அடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் அம்பேத்கர் உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களிலும், நீதிமன்ற வளாகங்களிலும் தேசத்தந்தை மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோரைத் தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் வைக்கப்படக் கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதனால், நீதிமன்றங்களில் அம்பேத்கரின் சிலைகளையும், உருவப் படங்களையும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

நீதிமன்ற வளாகங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களின் சிலைகளை அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கங்களிடமிருந்து வந்த கோரிக்கைகள், பல இடங்களில் தேசியத் தலைவர்களின் உருவச்சிலைகள் சேதப்படுத்தப்பட்டது உள்ளிட்ட சட்டம் – ஒழுங்கு சிக்கல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2008-ஆம் ஆண்டு முதல் இந்த நிலைப்பாட்டை சென்னை உயர்நீதிமன்றத்தின் முழுமை அமர்வு எடுத்து வந்திருக்கிறது.

இந்த முடிவுக்கு பின்னால் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் அக்கறையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதிலிருந்து அண்ணல் அம்பேத்கருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் நீதிமன்றங்கள் செயல்படுவதன் முதன்மை நோக்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது தான்.

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கான இடங்களில் அதை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் சிலைகளோ, படங்களோ இருப்பது எந்த வகையில் தவறு ஆகும்? எனவே, நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோருடன் அண்ணல் அம்பேத்கரின் சிலைகள், உருவப்படங்களையும் அமைக்க உயர்நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES