பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, லாரி மீது மோதி விபத்து..! 10 பேர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவின் நாசிக் நெடுஞ்சாலையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து ஷீரடி செல்லும் நெடுஞ்சாலையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர். தானேவில் உள்ள அம்பர்நாத்தில் இருந்து அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடிக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சின்னார் கிராமப்புற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயரச் சம்பவத்திற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்த அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படும் என அறிவித்தார்.

விபத்திற்குரிய காரணங்கள் குறித்து அம்மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்ற மூவர் யாரென்று குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES