14-வயது சிறுவனின் மலத்தை அள்ள வைத்து நில உரிமையாளர் கைது.!

விளை நிலத்தில் பள்ளி மாணவன் மலம் கழித்ததை கண்ட உரிமையாளர், சிறுவனிடம் மலத்தை அள்ள கூறி துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூட்டாரம்பள்ளியில் கடந்த ஜூலை 15-ம் தேதி மாலை 5-மணியளவில் 10-ம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுவன் ஒருவன் மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் அருகிலுள்ள புழுதி நிலம் ஒன்றில் மலம் கழிக்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் நில உரிமையாளரான ராஜசேகர் சிறுவன் மலம் கழிப்பதை கண்டு கோவமடைந்து கடுமையாக அடித்ததாகவும், மலத்தை சிறுவன் கையால் அள்ள வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதனையடுத்து, அந்த சிறுவன் 150 மீட்டர் தூரம் வரை தனது கைகளில் மலத்தை அள்ளி கொண்டு நடந்து சென்று ஏரியில் போட்டுள்ளார். இதனால், நில உரிமையாளரான ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் ராஜசேகர் கர்நாடகாவிற்கு தலைமறைவாகி விட்டதாக போலீசார் அறிவித்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் பள்ளி மாணவனை அடித்து துன்புறுத்தி மலத்தை அள்ளி வைத்த ராஜசேகரை போலீசார் கொரோனா பரிசோதனை செய்த பின்னர் எஸ். சி. எஸ். டி வன் கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவனுக்கு நடந்த இந்த கொடுமை அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.