“உக்ரைனில் தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உட்பட 16,000 இந்தியர்கள்” – ஓபிஎஸ் முக்கிய கோரிக்கை!

உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உட்பட 16,000 இந்தியர்களை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஓபிஎஸ் கோரிக்கை.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட கேரள மாணவர்களும் இன்று சென்னை வந்தனர்.சென்னை விமான நிலையம் வந்த 5 மாணவர்களையும் அமைச்சர் மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோரில் 1,800 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மேலும் 12 மாணவர்கள் இன்று மாலை அழைத்து வரப்பட உள்ளனர்”,என்று தெரிவித்தார்.

இதனிடையே,உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது பஸ்தி என்ற இடத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு இரவு, பகலாக உழைத்து வருகிறது. ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் இருந்து சுமார் 1000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில்,உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உட்பட 16,000 இந்தியர்களை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், அவர்களுக்கு தங்கு தடையின்றி உணவு,குடிநீர் கிடைக்கச் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.