‘நான் அரசியலுக்கு வருவதற்கு காரணம் இதுதான்’ – உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 22 வயது இளம்பெண்…!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் கோடம்பாக்கம் 136-வது வார்டு கவுன்சிலர் பதவியில் போட்டியிட 22 வயது இளம்பெண் நிலவரசி துரைராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  அந்த வகையில், திமுக சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 136 வது வார்டில் 22 வயதுக்குட்பட்ட இளம் வேட்பாளராக நிலவரசி துரைராஜ், இன்று தனது வேட்பு மனுவை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், எனக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டதற்கு முதல் காரணம் எனது அப்பா. ஏனென்றால் அப்பா 35 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மற்றோன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, அரசியலுக்கு வந்துள்ளேன் என்றும், தனது வார்டுக்குட்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என்றும் பேட்டி அளித்துள்ளார்.