அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு.!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து, கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதில், செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானுவும், இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என நீதிபதி பரத சக்கரவர்த்தியும் தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் முன்பு  இந்த வழக்கு விசாரணை நடைபெற்றதில், இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த பின், தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்படி வழங்கப்பட்ட தீர்ப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு தடை கோர முடியாது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாகக் கருத முடியாது. சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம். செந்தில் பாலாஜி கைதும், நீதிமன்ற காவலும் சட்டப்பூர்வமானது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கைது சட்டபூர்வமானது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

RELATED ARTICLES