Parliament adjourned until July 1

மீண்டும் நீட் சர்ச்சை…. ஜூலை 1 வரையில் முடங்கிய நாடளுமன்றம் ஒத்திவைப்பு .!!

By

டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை அன்று  தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முதல் 2 நாட்கள் எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து புதன்கிழமை அன்று மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. நேற்றைய நாளில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.

அதில் பல திட்டங்களை அவர் முன்மொழிந்தார். அதன்பின் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது.  இதைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஒத்திவைத்து நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரினர்.  அவர்களின் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 12 மணி வரையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின் மீண்டும் 12 மணிக்கு இரு அவையும் கூடியபோது, அப்போதும், இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் நீட் விவகாரம் குறித்து கோஷங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து, மக்களவையை திங்கள்கிழமை (ஜூலை 1) வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

Dinasuvadu Media @2023