வீடியோ வெளியிட்டு மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியது பாஜக!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்மூரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையமும் மாநிலம் வாரியாக அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக தொடங்கியுள்ளது.

உங்களின் கனவே எனது லட்சியம்.. இதுவே மோடியின் வாக்குறுதி – டெல்லியில் பிரதமர் உரை!

இதுதொடர்பாக பாஜகவின் எக்ஸ் தள பக்கத்தில், மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சார பாடலை வீடியோவாக தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளை போல் மக்களவை தேர்தலுக்கு தயாராகி வரும் பாஜக முதற்கட்டமாக நேற்று முன்தினம் குஜராத்தில் உள்ள காந்திநகரில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இன்றைக்கு பாஜக மக்களவை தேர்தலுக்கான பிரச்சார பாடலை வெளியிட்டுள்ளது.

இந்த பாடல் முழுவதுமே கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில், பிரதமரின் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம், வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அயோத்தி ராமர் கோவில், சந்திரயான் 3 விண்கலம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் குறித்த தகவல்கள் பிரச்சார வீடியோவில் இடம்பெற்றுள்ளது.