பாஜக நட்பு கட்சி தான், ஆனா கூட்டணி வேறு, கொள்கை வேறு – பொன்னையன் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் இந்தியை திணிக்க வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை என அதிமுக அமைப்புச் செயலாளர் கருத்து. 

சென்னை அண்ணா நகரில் செய்தியாளரிடம் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளரும், மூத்த நிர்வாகியுமான பொன்னையன், பாஜக நட்பு கட்சி தான். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என கூறிய அவர், தமிழகத்தில் இந்தியை திணிப்பதில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது என குற்றசாட்டினார். தமிழக பாஜக மாநில உரிமைக்காக போராடவில்லை என்பது நாடறிந்த உண்மை.

இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. நீட் தேர்வை நாங்கள் ஏற்கமாட்டோம் என்பதே எங்களது கொள்கை. தமிழகத்தின் எதிர்காலம், மாணவர்களின் நிலை என்ன ஆனாலும் சரி, எங்களுக்கு தேசிய கொள்கை என்ற முறையில் நீட் கட்டாயமாக தமிழகத்தில் திணிக்கப்படும் என்ற நிலைப்பாட்டை எடுத்து நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது பாஜக. இதில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.

முல்லை பெரியார் பிரச்சனையில் தமிழக நலனுக்காக அதிமுக உச்சநீதிமன்றத்தில் பெற்ற ஆணையை கூட நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. இதற்காக தமிழக பாஜக போராடவில்லை. தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என்ற போராட்டத்துக்கு அதிமுகவுடன், பாஜக இணைந்தும் செயல்படவில்லை, தனியாகவும் போராடவில்லை எனவும் குறிப்பிட்டார். அதேபோல் காவிரி நீரை தராத கர்நாடக பாஜக அரசுக்கும், மத்திய பாஜக அரசு ஆதரவு தெரிவிக்கிறது.

இதுபோன்று மொழி பிரச்சனை, ஈழ பிரச்சனை, நதிநீர் பிரச்சனை, வரி பிரச்சனை என எதிலுமே தமிழக பாஜக போராடவில்லை என்றும் தமிழக பிரச்சனைகளை முன்னிறுத்தி போராடினால் தமிழக பாஜக தானாக வளரும் எனவும் தெரிவித்தார்.  இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பேரவை நிர்வாகிகளுக்கு செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் பயிற்சியின் 2ம் நாளான நேற்று கலந்துகொண்டு பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், அதிமுகவின் இடத்தை பாஜக நிரப்புகிறது.

பாஜக, அதிமுகவின் கூட்டணி கட்சி தான் என்றாலும் கூட அக்கட்சி தமிழகத்தில் வளர்வது என்பது அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல. காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு, பாலாறு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது பாஜக. தமிழக உரிமைகளுக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் இரட்டை வேடம் போடும் பாஜகவை அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக ஊடகங்களில் அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். மேலும், அதிமுகவை அழித்து ஒழித்துவிட்டு தமிழ்நாட்டில் பாஜக வளர நினைக்கிறது என்று குற்றம் சாட்டிய பொன்னையன், அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment