ஆருத்ரா இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதில் முன்னுரிமை தரவேண்டும் என்றும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்தியவர்களுக்கு அடுத்த கட்டமாக முன்னுரிமை தந்து பணத்தை தரவேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.மேலும், கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால நிவாரணம் அளித்தும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என நீதிபதி கூறினார்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஆருத்ரா கோல்டு நிறுவனம், மாதந்தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி 1678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளனர். அவ்வாறு முதலீட்டாளர்களிடம் வசூலித்த திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன்பின், ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு கைது செய்யப்பட்டனர். ஆருத்ரா நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள், 70 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும்,  இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நிர்வாக இயக்குனர் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், 5 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. டெப்பாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி அளித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

Leave a Comment