Monday, June 3, 2024

மக்கள் செல்வாக்கு இருந்தால் மட்டுமே எம்.எல்.ஏ சீட் – ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி!

ஆந்திரா மாநிலத்தில் தங்கள் பகுதியில் உள்ள மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களுக்கு மட்டுமே, எம்பி. எம்எல்ஏ தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அதாவது, அம்மாநிலத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், எம்.எல்.ஏக்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உடன்  ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய முதலவர் ஜெகன் மோகன், ஆந்திர மாநிலத்திற்கு மீண்டும் முதல்வர் நாற்காலிக்கு ஜெகன் மோகன் ரெட்டி ஏன் தேவை என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும், மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை தங்கள் பகுதிகளில் நடத்தவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஆந்திர சட்டப் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடர் முடிந்தவுடன், விரைவில் மக்களிடம் இது குறித்து விவாதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனையின் போது, ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், வரும் தேர்தலில் சில எம்.எல்.ஏ.க்களுக்கு சீட்டு வழங்க முடியாது. ஆனால், அவர்களுக்கு தகுந்த பொறுப்புகள் வழங்கப்படும், நான் எடுக்கும் இந்த முடிவை அனைவரும் வரவேற்க வேண்டும்.

தேர்தலுக்கு முன் நாங்கள் எவ்வாறு செயல்படப் போகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அடுத்த இரண்டு மாதங்களில் மக்கள் மத்தியில் பேச வேண்டும் என்று கூட்டத்தில் அனைவருக்கும் முதல்வர் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வேறு எந்த முடிவுக்கு வரக்கூடாது என விளக்கமளித்த ஜெகன்மோகன் ரெட்டி, தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தி அடையக் கூடாது எனவும், ஆட்சி அமைந்தபின் உரிய அங்கீகாரம் அமைத்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES