Supreme court of India - NEET Exam 2024

நீட் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க முடியாது.! உச்சநீதிமன்றம் அதிரடி.! 

By

டெல்லி: கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வை இந்தியா முழுக்க சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதன் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியாகி பெரும் சர்ச்சைகளை எழுப்பியது.

அதில், ராஜஸ்தானில் ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்தது, 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்தது, 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது என பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன.

இதனை அடுத்து, குஜராத், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களில்  உள்ள நீதிமன்றங்களில் இந்த முறைகேடுகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இதனை ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. சுமார் 50 மாணவர்கள் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இப்படியாக சுமார் 8 வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  நேற்று நடைபெற்ற விசாரணையில், நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக தேசிய தேர்வு முகமை (NTA), மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில், நீட் தேர்வு மதிப்பெண் கொண்டு நடைபெறும் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையை (கவுன்சிலிங்) நிறுத்தி வைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டு இருந்தது. இதற்கு இன்று பதில் அளித்த நீதிபதி அமர்வு, நீட் கவுன்சலிங்கிற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.

குறைந்தபட்சம், அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் ஜூலை 8 வரையில் நீட் கவுன்சலிங் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் ஜூன் 6இல் நீட் கவுன்சலிங் தொடங்கி முடிய கால அவகாசம் ஆகும் என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்து இருந்தது. இதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

Dinasuvadu Media @2023