வரலாற்றை எழுதும் உங்கள் கைகள் ரத்தக் கறை படிந்தது – அமெரிக்க அதிபரை விமர்சிக்கும் துருக்கி அதிபர்!

ரத்தக்கரை படிந்த உங்கள் கைகளால் வரலாற்றை எழுதுகிறீர்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களை துருக்கி அதிபர் எர்டோகன் அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கு இடையே பல ஆண்டுகளாக நடைபெறக்கூடிய மோதல் தற்பொழுது ஒரு வாரமாக மிக அதிகமாக ஏற்பட்டு வருகிறது. காசா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது கடந்த வாரம் முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களது தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே வான்வழி தாக்குதல் அதிக அளவில் நடந்து வரும் நிலையில் காசா முனையை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் உயிரிழந்த நிலையில் இஸ்ரேலை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காசா மீதான விவகாரத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை உள்ளது என்பதால் இஸ்ரேலுக்கு 735 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் கையெழுத்து போட்டுள்ளார். இது குறித்து அமெரிக்காவில் உள்ள சில காங்கிரஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இதுதொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்தக்கரை படிந்த கைகளால் வரலாற்றை எழுதுகிறார் எனவும் தன்னை இப்படி பேச வைப்பது நீங்கள் தான் எனவும் ஜோ பைடனை விமர்சித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் இனியும் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது என தெரிவித்த அவர், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வது தொடர்பான ஜோ பைடன் கையெழுத்தை தாங்கள் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.