“பெண்களுக்கு உரிமை;ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்”- தாலிபான்கள் அறிவிப்பு!

ஷரியத் சட்டப்படி பெண்களுக்கு உரிமை மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள்,முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பை நேற்று நடத்தினர்.இந்த சந்திப்பில் எதிர்காலத்தில் அவர்களுடைய செயல்பாடு, திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

அப்போது,ஷரியத் சட்டப்படி பெண்களுக்கு உரிமை மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

மேலும்,இது தொடர்பாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:”ஆப்கான் முழுவதையும் கைப்பற்றிய பிறகு போராட்டத்தை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தோம்.ஆனால்,எதிர்பாராத விதமாக அரசு தோல்வியடைந்து வெளியேறி விட்டது.அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர உதவிய ஆப்கான் மக்களுக்கு பாராட்டுக்கள்.அண்டை நாடுகளுக்கு எதிராக ஆப்கான் மண்ணை யாரும் தவறாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.எந்த நாடும்,மக்களும் எங்களுக்கு எதிரியல்ல.நாங்களும் யாருக்கும் எதிரியல்ல.எனவே,எங்கள் ஆட்சியை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.

மேலும்,இஸ்லாமின் ஷரியத் சட்டப்படி பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் மற்றும் அவர்கள் பணியில் இருந்தாலும்,எந்த செயலில் இருந்தாலும் அனுமதிக்கப்படுவர்.அதுமட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானில் உள்ள பிற நாட்டு தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்”,என்று தெரிவித்தார்.

இதனையடுத்து,பெண் அரசியல்வாதிகளுக்கு ஆப்கான் மக்கள் வாக்களிப்பாளர்களா? என்று பெண் நிரூபர் கேட்ட போது தாலிபான்கள் சிரித்தபடியே ‘வீடியோவை நிறுத்து’ என்று கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.